நேபாளத்திலிருந்து தமிழர்களை மீட்க நடவடிக்கை! உதவிமைய எண்கள் அறிவிப்பு!
நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில்,
நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறிந்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளுமாறு முதல்வர் உத்தரவிட்டார்.
முதல்வரின் உத்தரவின்படி, நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிந்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி அவர்களை மீட்டுவருவதற்கு, புதுதில்லி, தமிழ்நாடு இல்லத்தில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை மற்றும் நேபாள நாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்டுவர புதுதில்லி, தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
நேபாளத்துக்கு சுற்றுப்பயணம் செய்த தமிழ்நாட்டைச் சார்ந்த 116 நபர்கள் பத்திரமாக வியாழக்கிழமையில் இந்தியாவுக்கு திரும்பிவிட்டனர்.
மேலும், நேபாளத்தில் சிக்கித்தவித்து வரும் தமிழர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்கவும், நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது குடும்ப உறுப்பினர்களின் நிலைகுறித்து தெரிந்து கொள்வதற்கும் புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி எண்: 011-24193300
கைபேசி எண்: 9289516712 (வாட்ஸ்ஆப்)
மின்அஞ்சல்: tnhouse@tn.gov.in, prcofficetnh@gmail.com
இதையும் படிக்க:நேபாள வன்முறையை ஆவணமாக்கிய பிரிட்டன் காணொளிப் பதிவர்..! வரலாறான சுற்றுப் பயணம்!