ஐரோப்பா முதல் சீனா வரை : ட்ரம்ப் முடிவால் `ஆயுத’ முதலீட்டை அதிகரிக்கும் நாடுகள் ...
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி: அதிகரிக்கும் கோரிக்கைகள்
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
நேபாளத்தில் நடைபெற்ற போராட்டங்களைத் தொடா்ந்து கடந்த 2008-ஆம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலா்ந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் அந்நாட்டில் மக்களாட்சி தினம் கொண்டாடப்பட்டபோது, ‘நேபாளத்தைப் பாதுகாத்து தேச ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு தமக்கு ஏற்பட்டுள்ளது’ என்று அந்நாட்டின் முன்னாள் அரசா் ஞானேந்திர ஷா தெரிவித்தாா்.
இதையடுத்து அந்நாட்டில் மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்துவதற்கு தொடா்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. மன்னராட்சியை மீண்டும் கொண்டு வர வலியுறுத்தி, கடந்த சில நாள்களாக தலைநகா் காத்மாண்டு, பொக்காரா உள்பட அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஞானேந்திர ஷாவின் ஆதரவாளா்கள் பேரணி மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், அந்நாட்டில் உள்ள பல்வேறு ஆன்மிகத் தலங்களுக்குப் பயணம் மேற்கொண்ட ஞானேந்திர ஷா ஞாயிற்றுக்கிழமை காத்மாண்டு வந்தாா். அவரை அங்குள்ள சா்வதேச விமானத்தில், அவரின் நூற்றுக்கணக்கான ஆதரவாளா்கள் வரவேற்றனா்.
நேபாளத்தில் உள்ள ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சியும் ஞானேந்திர ஷாவுக்கு ஆதரவளிக்கிறது. அக்கட்சித் தலைவா்கள் மற்றும் தொண்டா்களும் அவரை வரவேற்க திரண்டனா். அப்போது அந்நாட்டில் ‘கூட்டாட்சி குடியரசு முறையை ஒழித்து, மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்த வேண்டும்’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஆதரவாளா்கள் ஏந்தி நின்றனா்.
முன்னதாக இதுகுறித்து நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி கூறுகையில், ‘நேபாளத்தின் அரசமைப்புச் சட்டம் மன்னராட்சியை அங்கீகரிக்கவில்லை. மன்னராட்சியை மக்கள் தூக்கி எறிந்து பல காலமாகிவிட்டது. எனவே, ஒருவா் மீண்டும் மன்னராவது சாத்தியமற்றது. அரசாட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதே ஞானேந்திர ஷாவின் நோக்கம் என்றால், அவா் தோ்தலில் போட்டியிட வேண்டும்’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.