திண்டுக்கல்: கடும் மழையிலும் போக்குவரத்தை சீர்செய்த காவலர்கள்; நெகிழ்ச்சியடைந்த ...
நேபாள இடைக்கால அரசு: சுசீலா கார்க்கிக்கு பெருகும் இளைஞர்களின் ஆதரவு!
நேபாளத்தில் இடைக்கால அரசுக்குத் தலைமையேற்க, அந்நாட்டின் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஜென்-ஸி பிரதிநிதிகள் ஆதரவுத் தெரிவித்து வருகின்றனர்.
நேபாள நாட்டில், சமூக வலைதளங்கள் மீதான தடை மற்றும் அந்நாட்டு ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக ஜென் - ஸி என்றழைக்கப்படும் இளம்தலைமுறையினர் கடந்த செப்.8 ஆம் தேதி, மாபெரும் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் அரசுப் படைகளின் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், வன்முறை வெடித்தது.
இதனைத் தொடர்ந்து, நேபாளத்தின் பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜிநாமா செய்ததன் மூலம், அந்நாட்டு அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் குழுக்கள் முடிவு செய்தன.
இந்நிலையில், இடைக்கால அரசின் தலைவராக முன்மொழியப்பட்டவர்களில் நேபாளத்தின் முன்னாள் மற்றும் முதல் பெண் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியான சுசீலா கார்க்கிக்கு, இளைஞர்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது.
கடந்த 2016 ஜூலை முதல் 2017 ஜூன் மாதம் வரை நேபாள உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த, சுசீலா கார்க்கி, அந்நாட்டில் நடைபெற்ற ஊழல்களுக்கு எதிராக பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டவர் என அறியப்படுகிறார்.
இதுகுறித்து, ஜென் - ஸி பிரதிநிதிகள் ஒருவரான புருஷோத்தம் யாதவ் கூறியதாவது:
”நாங்கள் அமைதியான போராட்டத்தை நடத்தவே முயன்றோம் அரசுதான் அதைப் புரட்சியாக மாற்றியது. ஊழல்களுக்கு எதிராக இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும்.
நேபாளத்தில் வெறும் 3-4 சதவிகிதம் மக்கள் மட்டுமே அனைத்து சொத்துக்களையும் உரிமைக்கொண்டுள்ளனர். அனைத்து அரசியல்வாதிகளும் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கியை ஆதரிக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நேபாளத்தின் முதல்முறையாகப் பெண் ஒருவர் பிரதமராகப் பதவியேற்றால் பல முன்னேற்றங்கள் உருவாகும் எனும் கருத்தின் அடிப்படையில் இளைஞர்கள் தொடர்ந்து சுசீலா கார்க்கிக்கு ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிணைக் கைதிகளின் விடுதலைக்கான நம்பிக்கையை நெதன்யாகு கொன்று விட்டார்: கத்தார் பிரதமர்!