Rain Alert: நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி என்ன ஆகும்... எந்த...
நொச்சிக்குப்பம்: ``கடல நம்பி வாழுற எங்கள நசுக்காதீங்க" - `நீலக்கொடி' திட்டத்தை எதிர்க்கும் மீனவர்கள்
சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை முதல் நொச்சிக்குப்பம் வரையுள்ள கடற்கரையில் போக்குவரத்து நெரிசலற்ற மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நீலக்கொடி கடற்கரை சுற்றுலா தளம் அமைக்க உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கடந்த டிசம்பர் 21 அன்று அறிக்கை விடுத்திருந்தார். ஸ்ரீனிவாசபுரம் முதல் கலங்கரை விளக்கம் வரை படகுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட 1.2 கிலோமீட்டர் நிலத்தை மீட்பதும் இத்திட்டத்தில் வரும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த அறிக்கைக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் டிசம்பர் 24-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலையில் லூப் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து களத்திற்குச் சென்று போராட்டக்காரர்கள் மற்றும் மீனவ மக்களிடம் பேசினோம். அப்போது அவர்கள், "ஆரம்ப காலத்துல குழந்தைங்க பள்ளிக்கூடம் போகணும் அப்படின்னு இங்க இருக்கிற ரோட்டுல வாகனங்கள் போக பேச்சுவார்த்தை நடத்தினாங்க.. நாங்களும் கொடுத்தோம். அதுக்கப்புறம் இத அகலப்படுத்தணும் அப்படின்னு சிமென்ட் ரோட தார் ரோடா மாத்தினாங்க.. அதுக்கும் சரி அப்படின்னு விட்டோம். இந்த இடத்தை சீரமைக்கிறேன் அப்படின்னு இங்க கரைய ஒட்டி செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட்டை மாத்தி நவீன மார்க்கெட் ஒன்னு கட்டிக் கொடுத்தாங்க, அதுக்குள்ள ஆயிரம் பிரச்னை இருக்கு அது வேற விஷயம். பிறகு மெட்ரோ வேலை நடக்குது அதுக்காக வண்டிகளை இந்த பாத வழியா திருப்பி விடுறோம் அப்படின்னு இந்த லூப் ரோட ஒன்வே வா மாத்தினாங்க. சர்வீஸ் ரோடா இருந்த பகுதி இப்ப கனரக வாகனங்கள் சல்லு சல்லுனு வேகமாக வந்து போற இடமா மாறிடுச்சு. எங்களால சாதாரணமா ரோட்டை கிராஸ் பண்ணி கடற்கரைக்கு போக முடியல.
இப்ப என்னடான்னா ப்ளூ ஃபிளாக் பீச் அப்படின்னு வசதி படைத்தவங்க மேலும் சொகுசாக இருப்பதற்கான திட்டத்த இங்க கொண்டு வரேன் அப்படின்னு அறிக்கை விட்டு இருக்காங்க.. அதுல காலங்காலமா வாழ்ந்துட்டு வந்த எங்கள 1.2 கி.மீ நிலத்த ஆக்கிரமிச்ச ஆக்கிரமிப்பாளர்களா ஆக்கிட்டாங்க. கிட்டத்தட்ட சுதந்திரம் வாங்குறதுக்கு முன்னாடி இருந்து இங்க நாங்க குப்பத்து மக்கள் இருக்கோம். அதற்கான தரவுகளும் இருக்கு.. பின்ன எந்த வகையில இவங்க நாங்க படகு மூலமா ஆக்கிரமித்து இருக்கோம் அப்படின்னு சொல்லலாம்..? அறிக்கை விடுறதுக்கு முன்னாடி அந்த பகுதி மக்கள்ட்ட இவங்க என்ன வந்து விசாரிச்சாங்க..? இதை பத்தி முன்னறிவிப்பு, தகவல் எதுவுமே சொல்லாம பத்திரிகைல அறிக்கை விட்டுருவாங்க... அப்புறம் வந்து அந்தப் பகுதி மக்கள் கிட்ட பேசுவாங்களா? இத பத்தி நாங்க முன்னாடியே தெரிஞ்சிக்கிட்டு அதிகாரி கிட்ட கேட்டோம். அப்ப அப்படியெல்லாம் ஒரு திட்டமும் இல்ல அப்படின்னு சொன்னாங்க, ஆனா இப்போ அதை அறிக்கையா வெளியிட்டு இருக்காங்க.
காந்தி சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வர கிட்டத்தட்ட 2000 கடைகள் இருந்துச்சு ஒருவேளை ப்ளூ ஃபிளாக் பீச்சா வந்தா அதே எங்களை கடை போட விடுவீங்களா..? அப்படின்னு கேட்டா, அதுக்கு, ஆயிரத்தி சொச்சம் போடலாம் அதுலயும் 60 சதவீதம் ஏற்கனவே இருந்தவங்களும் மீதம் இருக்கும் 40% புதுசா கடை போடுறவங்களுக்கும்' அப்படின்னு கோர்ட் ஆர்டர் சொல்லுதாம். அப்போ கடல் சார்ந்த தொழில மட்டுமே நம்பி இருக்குற மீதி இருக்க 1,400 மக்களோட வாழ்வாதாரம் என்ன ஆகுறது...? அதனால நாங்க வாழ்ற இடத்துல இந்த ப்ளூ பிளாக் அப்படின்றதே வேண்டாம்.. உங்களுக்கு போடணுமா தாராளமா அண்ணா சமாதி தாண்டி இருக்கிற பகுதியில் போட வேண்டியது தானே? எதுக்கு அந்தக் கடலையே நம்பி இருக்கிற மக்கள் வாழ்கிற பகுதியில போட நினைக்கிறீங்க? எல்லாரும் கோவளம் கடற்கரைய மேற்கோள் காட்டி சொல்லுவாங்க. இப்போ இங்க வேலைவாய்ப்பு கடை போடும் வசதி அப்படின்னு என்ன எல்லாம் பண்ணி தரேன்னு சொல்றாங்களோ... அது எல்லாத்தையுமே அங்கேயும் சொன்னாங்க. உண்மை என்னன்னா சொன்ன எதையுமே அங்க பண்ணல. முன்னாடி அந்த கடல் சார்ந்த வேலை பண்ண பல பேருல இப்போ அந்த கடல் சார்ந்த வேலையை பண்ண முடியல.
எங்களுக்கு ஒன்னும் அரசாங்கம் கொண்டு வந்து திட்டங்களை எதிர்க்கணும் அப்படின்னு எதுவும் இல்ல... இங்க இருக்கிற மக்களுக்கு அது பிரச்சனையா இருக்குறதுனால தான் நாங்க எதிர்க்கிறோம். இது மட்டும் இல்ல எங்களுக்கான ஒவ்வொரு உரிமையுமே நாங்க போராடி தான் வாங்க வேண்டியதா இருக்கு. எங்களுக்கு ஒரே ஒரு கோரிக்கை தான், ட்ரிப்ளிகேன் நட்டாக்குப்பம் முதல் திருவான்மியூர் வரை இருக்கிற இந்த மீனவ பகுதிகள கடலோர பாதுகாப்பு மண்டலமா அறிவிச்சு எங்களோட வாழ்வாதாரத்தை பாதிக்கிற மாதிரி எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வராமல் இருக்குறதுதான்.
நீங்க பொழுதுபோக்கு வசதியுடன் மேம்படுத்தப்பட்ட கடற்கரையை தாராளமா அமைங்க, ஆனால் அது எங்கள மாதிரி கடல சார்ந்து இருக்க மக்களோட வாழ்வாதாரத்தை அழிச்சு பண்ணனும்னு நினைக்காதீங்க.
அதனால இந்த திட்டத்தை முழுசா கைவிடணும். அப்படி நிறுத்தாம இந்த திட்டத்த செயல்படுத்தினீங்கன்னா இன்னிக்கி ஒரு குப்பம்மா மட்டும் சேர்ந்து போராடின நாங்க, எங்க மீனவ சமுதாய மக்கள் எல்லாரையும் ஒன்னு கூட்டி பெரிய போராட்டம் பண்ணுவோம். அதுல எங்க உயிரே போனாலும் சரி... கடல நம்பி வாழுற எங்கள நசுக்காதீங்க" என்று கூறினார்கள்.
மாநகர டெபுடி கமிஷனர் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பின்பு, போராட்டத்தை கைவிட்டனர். பின்பு மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் இவர்களின் கருத்துகளைக் கேட்டுக்கொண்டு, இதை மேல் இடத்திற்கு கொண்டு செல்வதாகக் கூறியுள்ளனர்.