90 நிமிடங்களில் உங்க நிதி வாழ்க்கையை மாத்திடலாம் - எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா?
பசும்பொன்: தேவர் நினைவிட பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்; தர்ணாவும் செய்ததால் பரபரப்பு
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பூசாரியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்வர்ட் பிளாக் கட்சியின் முக்கியத் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா இன்று நடந்து வருகிறது.
இவ்விழாவில் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு அமைப்பினரும் இன்று பசும்பொன்னுக்கு வருகை தந்து முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
வி.வி.ஐ.பி-க்களின் வருகையினால் அதிகமான அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், அரசியல் கட்சி, சாதி அமைப்புகளின் தலைவர்களோடு வரும் தொண்டர்களை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடிவில்லை. இதனால் தேவர் நினைவிடப் பகுதியில் கூட்டத்தைக் கலைந்து செல்ல வைக்க மிகவும் சிரமமாக இருந்தது.

இந்த நிலையில் அஞ்சலி செலுத்த ஆதரவாளர்களுடன் வந்த மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், நினைவிடத்திலுள்ள தேவர் சிலைக்கு மரியாதை செய்து பூஜை செய்தபோது அங்கிருந்த பூசாரிகள் ஏதோ கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஸ்ரீதர் வாண்டையார் நினைவிடத்தின் பூசாரி ராஜா என்பவரைத் திடீரென கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் நினைவிடப் பொறுப்பாளர்கள், பணியாளர்கள் கோபத்துடன் கேள்வியெழுப்ப அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் அவர்களைச் சமாதனப்படுத்தினர். அதன் பின்பு ஸ்ரீதர் வாண்டையார் அங்கேயே அமர்ந்து தர்ணா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை அதிகாரிகளும், அங்கிருந்த அரசியல் கட்சியினரும் அவரைச் சமாதனபடுத்தி அங்கிருந்து அனுப்பினார்கள். இதனால் சிறிது நேரம் மக்கள் அஞ்சலி செலுத்த முடியாததால் சலசலப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செய்ய வந்த இடத்தில், அவருடைய நினைவிடப் பணியாளரை, அவரை அடையாளமாகக் கொண்டு அமைப்பு நடத்தும் ஸ்ரீதர் வாண்டையார் தாக்கியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

















