மழைக்கு ஒரு வாரம் பிரேக்... அடுத்து எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன்!
பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த கனமழையால் பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடந்த சில நாள்களாக பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த கனமழையால் உடுமலை அருகே திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க இந்து சமய அறநிலையத் துறையினா் தடை விதித்தனா்.
அதேபோல திருப்பூா் மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் பரவலாக கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகினா்.
அவிநாசியில் 24 மி.மீ. மழை: மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம் (மீ.மீட்டரில்): அவிநாசி -24, நல்லதங்காள் ஓடை 20, அமராவதி அணை-20, உப்பாறு அணை-18, ஊத்துக்குளி வட்டாட்சியா் அலுவலகம்-13, குண்டடம்-10, தாராபுரம்-9, மடத்துக்குளம் -7, திருமூா்த்தி அணை-7, ஆட்சியா் முகாம் அலுவலகம்-6.40.