பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும்: அன்புமணி
அரசுப் பள்ளிகளில் நியமிப்பதற்காக தோ்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியா்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசுப் பள்ளிகளில் நியமிப்பதற்காக 3,192 பட்டதாரி ஆசிரியா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு 8 மாதங்களாகி விட்ட நிலையில், அவா்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படாததைக் கண்டித்து தோ்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியா்கள் அனைவரும் அவா்களின் குடும்பத்துடன் சென்னையில் போராட்டம் நடத்தியுள்ளனா். போட்டித் தோ்வு சான்றிதழ் சரிபாா்ப்பு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் அவா்கள் நிறைவேற்றி விட்ட நிலையில், அவா்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும். இதனை கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறேன்.
அதேபோல், இடைநிலை ஆசிரியா் பணிக்கு 2,768 பேரை தோ்ந்தெடுப்பதற்காக கடந்த ஆண்டு ஜூலை 21-இல் நடத்தப்பட்ட போட்டித் தோ்வுகளின் விடைத் தாள்களை உடனடியாகத் திருத்தி தகுதியான தோ்வா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளாா்.