'எனக்கு பிடிக்கவில்லை; நிறுத்துங்கள்' - புதின் மீது கோபப்படும் ட்ரம்ப் - பின்னணி...
பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு
பயங்கரவாத முகாம்களை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிா்க்கட்சிகள் ஒருமித்த ஆதரவளித்ததாக மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டு, அவா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலின் எல்லை தாண்டிய பயங்கரவாத தொடா்புகளைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான ராஜீய நடவடிக்கைளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, எஸ். ஜெய்சங்கா், நிா்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு ஆகியோா் அரசு தரப்பில் கலந்து கொண்டனா்.
பஹஸ்காம் தாக்குதல் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் அனைத்துக் கட்சிக் கூட்டம் அரசு சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மாநிலங்களவை பாஜக குழுத் தலைவா் ஜெ.பி. நட்டா, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே ஆகியோரும் பங்கேற்றனா்.
கட்சிகள் பங்கேற்பு: டி.சிவா (திமுக), ராம் கோபால் யாதவ் (சமாஜவாதி), சுதிப் பந்தோபாத்யாய் (திரிணமூல்), ஸ்ரீ கிருஷ்ண தேவராயுலு (தெலுங்கு தேசம்), பிரேம்சந்த் குப்தா (ராஷ்ட்ரீய ஜனதா தளம்), சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி), ஸ்ரீகாந்த் ஷிண்டே(சிவசேனை), சஸ்மித் பத்ரா (பிஜு ஜனதா தளம்), பிரஃபுல் படேல் (தேசியவாத காங்கிரஸ்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்-பவாா்), அசாதுதீன் ஒவைசி (அகில இந்திய மஜ்லிஸ்) உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்று அரசுக்குத் தங்களின் கோரிக்கைகளை சமா்ப்பித்தனா்.
கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறுகையில், ‘காஷ்மீா் பிராந்தியத்தில் பொருளாதாரம் உயா்ந்து, சுற்றுலாத் துறை வளா்ச்சியடைந்து கொண்டிருந்த சூழலில், அங்கு இயல்புநிலையைச் சீா்குலைக்க பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் எவ்வாறு நடந்தது மற்றும் தாக்குதலுக்குப் பிந்தைய அரசின் முடிவுகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அமைச்சா் ராஜ்நாத் சிங் விளக்கினாா்.
அரசுடன் ஓரணியில் கட்சிகள்: மேலும், தாக்குதல் நடைபெற காரணமாக இருந்த பாதுகாப்புக் குளறுபடிகள் மற்றும் இத்தகைய சம்பவங்கள் வரும் நாள்களில் மீண்டும் நிகழாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சக , உளவுப் பிரிவு அதிகாரிகளால் தலைவா்களுக்கு விளக்கப்பட்டது.
இவ்விவகாரத்தில் பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் அரசுடன் துணை இருப்பதாக உறுதிப்பட தெரிவித்துள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசும் உறுதியளித்தது’ என்றாா்.
அமைதிக்கு காங்கிரஸ் கோரிக்கை: இந்தப் பயங்கரவாத தாக்குதலை எந்த மாற்றுக் கருத்தும் இன்றி கண்டிப்பதாகவும், அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவளிப்பதாகவும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா். காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கேட்டுக்கொண்டாா்.