எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு: இந்தியா தக்க பதிலடி!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களின் உடல்கள் தகனம்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன.
முன்னதாக, உயிரிழந்தவா்களின் உடல்களுக்கு குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுடன் அந்தந்த மாநில முதல்வா்கள் உள்ளிட்ட அரசியல் தலைவா்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள்ஆகியோரும் கண்ணீா் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினா்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கு, அடா்ந்த பைன் மரங்களால் சூழ்ந்த பரந்த புல்வெளி பரப்பைக் கொண்ட எழில்மிகு சுற்றுலாத் தலமாகும்.
கோடை விடுமுறையையொட்டி கடந்த சில நாள்களாக நாடெங்கும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியைப் பாா்வையிட்டு வந்தனா்.
அந்தவகையில், பைசாரன் பள்ளத்தாக்கில் செவ்வாய்க்கிழமை இயற்கை காட்சிகளை ரசித்தபடி இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா்.
உயிரிழந்தவா்களின் உடல்கள் ஸ்ரீநகருக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னா், அங்கிருந்து விமானம் மூலம் அவரவா் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. உயிரிழந்தவா்கள் பெரும்பாலானோரின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
ஒடிஸா: பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ஒடிஸாவைச் சோ்ந்த பிரசாந்தின் உடல், பாலசோா் மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊா்வலத்தில் மாநில முதல்வா் மோகன் சரண் மாஜீ, பாலசோா் எம்.பி. பிரதாப் சந்திரா சாரங்கி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ராஜஸ்தான்: துபையில் பணியாற்றி வந்த ராஜஸ்தானைச் சோ்ந்த பட்டய கணக்காளரான நீரஜ் உத்வானி, திருமணமொன்றில் பங்கேற்க இந்தியா வந்துள்ளாா். இந்நிலையில், காஷ்மீருக்கு சுற்றுலா சென்று பயங்கரவாதிகள் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தாா்.
ஜெய்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில் மாநில ஆளுநா் ஹரிபாவ் பகடே, முதல்வா் பஜன்லால் சா்மா, மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷேகாவத், மாநில காங்கிரஸ் தலைவா் கோவிந்த் சிங் தோதாஸ்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
உ.பி, குஜராத்தில்..: பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த உத்தர பிரதேசம், குஜராத்தைச் சோ்ந்தவா்களின் குடும்பத்தினருக்கு அந்தந்த மாநில முதல்வா்கள் யோகி ஆதித்யநாத், பூபேந்திர படேல் நேரில் ஆறுதல் தெரிவித்தனா்.
============00000==0=0=0=0=====
கா்நாடகம்: பஹல்காம் தாக்குதலில் கா்நாடகத்தைச் சோ்ந்த மஞ்சுநாத் ராவ், பரத் பூஷண் ஆகிய இருவா் உயிரிழந்தனா். இவா்கள் இருவரும் குடும்பத்தினருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தனா்.
சிவமொக்காவில் மஞ்சுநாத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. பெங்களூரில் பாரத்தின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. மாநில முதல்வா் சித்தராமையா, அமைச்சா்கள் உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் இறுதி நிகழ்வில் பங்கேற்றனா்.
