பரமக்குடி: சகோதரியுடன் திருமணம் மீறிய உறவு; நண்பனை வெட்டிக் கொன்ற நபர்!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியை சேர்ந்த முத்துக்குமாரும் சரவணனும் நண்பர்கள். இவர்கள் இருவரும் சிறுவர்கள் ராட்டினம் நடத்தும் தொழிலில் ஈடுபட்டு வருவதுடன், திருவிழா காலங்களில் பல்வேறு ஊர்களுக்கு சென்று சிறுவர்கள் விளையாடும் ராட்டினம் அமைத்து வருவாய் ஈட்டி வந்தனர்.
இதனிடையே சரவணனின் சகோதரி யசோதை கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கும் முத்துக்குமாருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சரவணன், முத்துக்குமாரை பல முறை கண்டித்ததுடன், தனது சகோதரியுடனான தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனாலும் அவர் இதனை ஏற்கவில்லை.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் முத்துக்குமாரும், மகாசக்திபுரத்தில் சரவணனும் ராட்டினம் அமைத்திருந்தனர். நேற்று சரவணன் தலைமையிலான கும்பல் ஒன்று கார் மற்றும் டூவீலர்களில் நம்புதாளைக்கு சென்று அங்கு முத்துக்குமாரை அரிவாளால் சரமரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதனை தடுக்க வந்த முத்துக்குமாரின் தாய் சுசிலாவுக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டது.
இக்கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த திருவாடானை டி.எஸ்.பி சீனிவாசன், தொண்டி இன்ஸ்பெக்டர் செளந்திரபாண்டியன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று முத்துக்குமாரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து முக்கிய குற்றவாளியான சரவணனை கைது செய்தனர். மேலும் கொலையில் தொடர்புடைய கூலிப்படையினரை போலீஸார் தேடி வருகின்றனர்.