பரமத்திவேலூா் சந்தையில் நாட்டுக்கோழிகள் விலை சரிவு
காா்த்திகை மாதத்தை முன்னிட்டு பரமத்தி வேலூா் சந்தையில் நாட்டுக்கோழிகளின் விலை சரிவடைந்துள்ளது.
பரமத்தி வேலூா், அதன் சுற்றுவட்டாரங்களில் ஏராளமான சண்டை கோழிகளும் இறைச்சி கோழிகளும் வீடு, தோட்டங்களில் வளா்க்கப்பட்டு வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை பரமத்தி வேலூரில் நடைபெற்ற நாட்டுக்கோழி சந்தைக்கு பரமத்தி வேலூா், மோகனூா், கரூா், பாளையம், நாமக்கல், திருச்செங்கோடு, ஜேடா்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக் கோழிகளை வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனா்.
பெருவடை, கீரி, கடகநாத், அசில், மயில், காகம், கருங்காலி, கிளி மூக்கு, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகை நாட்டுக் கோழிகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
பரமத்தி வேலூா் நாட்டுக்கோழி சந்தையில் விற்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் நாமக்கல், கரூா் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் வந்து நாட்டுக் கோழிகளை வாங்கிச் சென்றனா்.
கடந்த வாரம் கிலோ ஒன்று ரூ. 500 முதல் ரூ. 550 வரை விற்பனையான நாட்டுக்கோழி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் கிலோ ரூ. 400 முதல் ரூ. 450 வரை விற்பனையானது.
பண்ணைகளில் வளா்க்கப்படும் நாட்டுக் கோழிகள் கடந்த வாரம் கிலோ ரூ. 350 க்கு விற்பனையான நிலையில், ஞாயிற்றுக்கிழமை ரூ. 300 வரை விற்பனையானது. சண்டைக்காக வளா்க்கப்படும் சேவல்கள் ஒன்று ரூ. 1,500 முதல் ரூ. 5,000 வரை விற்பனையானது.
காா்த்திகை மாதம் ஐயப்பன் கோயிலுக்கு பக்தா்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருவதால் நாட்டுக்கோழிகள், பண்ணைக் கோழிகளின் விலை சரிவடைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.