பலன் தரும் 11 கருடசேவை
சிவனை அழைக்காமல் யாகம் செய்த தட்சனுக்கு அறிவுரை கூற சென்றபோது, பார்வதி இகழப்பட்டாள். சினமுற்ற பார்வதியோ யாகத்தை அழிக்க, சிவன் சீற்றத்துடன் உபயகாவேரி மத்திமத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார். அப்போது சடாமுடி தரையில் படும்போதெல்லாம் ஒவ்வொரு சிவனாகத் தோன்றி, கொடூர நடனமாடினர். தேவர்களும், ரிஷிகளும் பேரழிவுக்கு அஞ்சி திருமாலிடம் வேண்ட, பரமபதத்தில் இருந்து அவர் புறப்பட்டார்.
திருமாலைக் கண்டதும் சிவனது கொடூரமான தாண்டவம் நின்றது. "என்னைப் போல் நீங்களும் 11 திருக்கோலங்களில் காட்சி அருள்க' என சிவன் வேண்ட பூலோகத்தில் அர்ச்சாவதார மூர்த்திகளாக உள்ள 10 திவ்ய தேச மூர்த்தங்கள் எழுந்தருளின. சிவனும் சினம் தணிந்தார். 11 நாராயண திருவுருவங்கள் எழுந்தருளிய உபயகாவேரி மத்திமமானது "திருநாங்கூர்' அமைந்தது.
ராமாயணப் போரின்போது அனைவரும் நாகப் பாசத்தால் கட்டுண்டபோது, கருடன் தன் சிறகுகளால் வீசி மூர்ச்சை தெளிய வைத்தார். கிருஷ்ணாவதாரத்தில் சத்யபாமாவுக்காக பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்தார் கருடன். அவரே பெரியாழ்வாராக அவதரித்து, பல்லாண்டு பாடினார்.
கருடனை வானிலும், பெருமாளை கருடனிலும் தரிசிப்பதால் முற்பிறவி சாபங்களும், தோஷங்களும் நீங்கும். அமாவாசையில் தரிசித்தால் முழுப் பலனும் கிடைக்கும்.
திருமங்கையாழ்வார், மங்களாசாசனம் செய்து வரும்போது, நாங்கூருக்கு அருகில் மஞ்சக்குளி என்ற இடத்தில் ஸ்ரீரங்கநாதனையும் , நாச்சியார்கோயில் சீனிவாசனையும் சேவிக்க விருப்பம் கொண்டார். அவர்களும் இங்கேயே எழுந்தருளி ஆழ்வாருக்கு அருளினர். அவர்களே வந்து அருளுவதைக் காண, 11 திவ்ய தேசத்து நாயகர்களும் ஒருங்கே கருட வாகனத்தில் எழுந்தருளினர் என்கிறது வரலாறு. அதுமுதல் இந்த வரலாற்று நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.
11 பெருமாள்களும் ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூருக்கு எழுந்தருள்கின்றனர். இவ்
விழாவில் தரிசிப்பது 22 திவ்ய தேசங்களுக்குச் சென்று கருடசேவை தரிசனம் செய்வதற்கு சமம் என்கின்றனர்.
இவ்வாண்டு 2025 ஜனவரி 29}இல் திருமங்கையாழ்வார் திருநகரியில் இருந்து புறப்பட்டு, திருக்குறையலூர், திருமங்கை மடம், திருகாவளம்பாடி, திருமணிக்கூடம், திருப்பாத்தன்பள்ளி ஆகிய திவ்யத் தேசங்களை மங்களாசாசனம் செய்து மஞ்சக்குளி மண்டபம் எழுந்தருள்வார்.
அங்கிருந்து திருநறையூர் நம்பி, ஸ்ரீரங்கம் அழகிய மணவாளனையும் மங்களாசாசனம் செய்து, திருமஞ்சனம் திருப்பாவை சாற்றுமுறை முடிந்து திருநாங்கூரில் உள்ள 6 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து இரவு மணிமாடக்கோயில் எழுந்தருள்வார்.
ஜனவரி 30}இல் (ஞாயிற்றுக்கிழமை) திருப்பாவை சாற்று முறையும் பின்னர் பதினோரு திவ்ய தேச எம்பெருமான்களும் மணிமாடகோவில் முன்பந்தலில் எழுந்தருளி அனைவருக்கும் அலங்காரத் திருமஞ்சனம் தொடர்ந்து அலங்காரம் நடைபெறும். பின்னர், திருமங்கையாழ்வார் பந்தலுக்கு எழுந்தருளி, ஒவ்வொரு பெருமாளையும் மங்களாசாசனம் செய்வார்.
அப்போது ஸ்ரீ மணவாள மாமுனிகள் வந்து திருமங்கையாழ்வாரை மங்களாசாசனம் செய்வார். இரவு அனைத்து பெருமாள்களுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடந்து தொடர்ந்து 11 பெருமாள்களும் கருட வாகனத்திலும், குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வார் ஹம்ச வாகனத்திலும், எழுந்தருளி, கருட சேவை வீதியுலா நடைபெறும்.
வீதியுலா முடிந்து மறுநாள் அதிகாலை 5 மணிக்கெல்லாம், அந்தந்த பெருமாள்கள் தொடங்கிய இடத்துக்கு வந்து காலபூஜை ஆனபிறகு மீண்டும், தங்களது கருட வாகனத்தில் தங்களின் திவ்ய தேசத்துக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். சீர்காழிக்கு தென் கிழக்கே நாகப்பட்டினம் செல்லும் வழியில் சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருநாங்கூர்.
}இரா.இரகுநாதன்