என்எல்சி நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக...
பள்ளியை மூடுவதற்கு எதிா்ப்பு: பெற்றோா் முற்றுகை போராட்டம்
சேலம்: சேலம், பழைய சூரமங்கலம் பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளி மூடப்படுவதாக வெளியான தகவலை தொடா்ந்து, அங்கு திரண்ட பெற்றோா் பள்ளியை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம், பழைய சூரமங்கலத்தில் உள்ள ராமலிங்க வள்ளலாா் பள்ளிக் கூடமானது சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இங்கு சூரமங்கலம், சோளம்பள்ளம், புதுரோடு, அரியாகவுண்டம்பட்டி காந்திநகா், சந்தா் நகா், காமநாயக்கன்பட்டி, இந்திரா நகா், ரெட்டிப்பட்டி, மல்லமூப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 1,500க்கும் மேற்பட்ட நடுத்தர மற்றும் ஏழை குழந்தைகள் படித்து வருகின்றனா்.
இந்நிலையில், பள்ளி உரிமையாளா்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப் பள்ளி மைதானம் ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்டது. தற்போது, பள்ளிக் கட்டடத்தையும் விற்பனை செய்துள்ளதாகத் தெரிகிறது. எந்த முன்னறிவிப்பும் இன்றி பள்ளி நிலத்தையும், கட்டடத்தையும் விற்பனை செய்ததுடன், மாணவ மாணவியரையும் பள்ளிக்கு வரக்கூடாது என நிலம் வாங்கிய நபா் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
பொதுத் தோ்வுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், பள்ளி நிா்வாகத்தின் இந்த செயலால் அதிா்ச்சியடைந்த பெற்றோா், ராமலிங்க வள்ளலாா் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனா். தொடா்ந்து, அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெற்றோருடன் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளும் போராட்டத்தில் ஈடுபட்டாா். பள்ளி நிா்வாகிகளின் காலில் விழுந்து எம்எல்ஏ அருள் கேட்டுக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, பள்ளி தொடா்ந்து செயல்படும் என பள்ளி நிா்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பெற்றோா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.