'பாஜக அரசு பயப்படுகிறது' - பிரியங்கா காந்தி
அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த பாஜக அரசு பயப்படுவதாக காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
'அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த பாஜக அரசு பயப்படுகிறது. எந்தவொரு விவாதம் நடத்தவும் இந்த அரசு பயப்படுகிறது. அம்பேத்கர் மீதான அவர்களின் உண்மையான உணர்வுகள் இப்போது வெளியில் தெரிந்துவிட்டது. இப்போது நாம் இந்த பிரச்னையை எழுப்புவதால் அவர்கள் பயப்படுகிறார்கள்.
நமது அரசியலமைப்பு அம்பேத்கரால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரை அவமதிப்பதை இந்தியாவால் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்திய மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.
இது அரசாங்கத்தின் அவநம்பிக்கை. அவர்கள் பொய்யான வழக்குப்பதிவுகளைச் செய்கிறார்கள். ராகுல் யாரையும் ஒருபோதும் தள்ளிவிட்டதில்லை. நான் அவருடைய சகோதரி, எனக்கு அவரை நன்றாகத் தெரியும். அவர் ஒருபோதும் அப்படிச் செய்யமாட்டார். அவர்கள் எவ்வளவு அவநம்பிக்கையுடன் ஆதாரமற்ற வழக்குப்பதிவு செய்கிறார்கள் என்பதை இந்த நாடு கவனித்துக் கொண்டிருக்கிறது' என்று பேசினார்.
குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு!
கடந்த நவ. 25 ஆம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியநிலையில் அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால், அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் முடங்கின.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் பேசிய அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்ததாக இரண்டு நாள்களாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், உள்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் அவைகளில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காலை அவை கூடியவுடன், எதிர்க்கட்சி எம்பிக்கள் ஜெய் பீம் என்று முழக்கமிட்டனர். முழக்கங்களுக்கு இடையே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்புவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, நாடாளுமன்ற அவை மற்றும் வளாகத்தில் எம்பிக்கள் போராடுவதற்கு கண்டனம் தெரிவித்த அவைத் தலைவர் ஓம் பிர்லா, மக்களவை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார்.