ஜெய்ப்பூர் ரசாயன லாரி விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி!
ராஜஸ்தானில் ரசாயன லாரி ஏற்படுத்திய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்தார்.
ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை (டிச. 20) அதிகாலையில் ரசாயன லாரி மோதி நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்து குறித்த நிலவரங்கள் குறித்தும் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவுடன் கேட்டறிந்தார்.
இதுகுறித்து, பிரதமர் அலுவலகத்தின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ``ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்; காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு வெளியே ரசாயன லாரி மோதியதில் 30 லாரிகள் உள்பட பல வாகனங்களில் தீ பிடித்தது. இந்த விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர், 37 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்; அவர்கள் பாதிபேர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளதாகத் தெரிகிறது
இதையும் படிக்க:தில்லி பாஜக அலுவலகம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் பீதி