சூப்பர் 4 கடைசிப் போட்டி: இலங்கைக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு அரசு சார்பில் 13-ம் நாள் சடங்குகள்!
மறைந்த அசாமிய பாடகர் ஸுபீன் கர்க்கின் 13 ஆம் நாள் வேத சடங்குகள், அசாம் அரசின் சார்பில் நடைபெறும் என முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா அறிவித்துள்ளார்.
பிரபல அசாமிய பாடகர் ஸுபீன் கர்க், கடந்த செப்.19 ஆம் தேதி சிங்கப்பூரில் ஆழ்கடல் சாகசத்தில் ஈடுபட்டபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, அசாம் கொண்டு வரப்பட்ட அவரது உடல், குவாஹட்டி மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது, லட்சக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, கம்ரூப் மாவட்டத்தில் உள்ள கமர்குச்சி கிராமத்தில் ஸுபீன் கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பாடகர் ஸுபீன் கர்க்கின் பூர்வீக வீடு அமைந்துள்ள ஜோர்ஹாட் நகரத்தில் அவரது 13 ஆம் நாள் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு அவருக்கு நினைவிடம் ஒன்று அமைக்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா, பாடகர் ஸுபீன் கர்க்கின் 13 ஆம் நாள் வேத சடங்குகள் ஜோர்ஹாட்டில் நடைபெறும் எனவும், அங்கு அவரது அஸ்தியானது கொண்டு வரப்படும் எனவும் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளார்.
இத்துடன், அதற்கான ஏற்பாடுகளை இறுதி செய்வதற்காக, அசாமின் கலாசார விவகாரங்கள் அமைச்சர் பிமல் போரா, ஸுபீன் கர்க்கின் மனைவி கரிமா கர்க்கை, இன்று (செப். 26) நேரில் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: லடாக் வன்முறை - ஜென் ஸீ போராட்டம் அல்ல! காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு!