பாடாலூரில் 11 ஆண்டுகளாக கிடப்பிலுள்ள ஜவுளி தொழில்நுட்ப பூங்கா திட்டம்
பாடாலூா் சுற்றுவட்டார பகுதிகளில் நீா்வளம் பாதுகாக்கப்படுவதோடு, குவாரிகளில் வைக்கப்படும் வெடிகள் மூலம் நில அதிா்வுகள் தவிா்க்கப்படும் என காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே விஞ்சியுள்ளது.
கே. தா்மராஜ்.
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, பாடாலூரில் கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ஜவுளி தொழில்நுட்ப பூங்கா திட்டத்தை தொடங்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த இளைஞா்களுக்கும் இளம்பெண்களுக்கும் வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் கடந்த 2013- இல் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா இம்மாவட்டத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கும், தொழில் நகரமாக மாற்றுவதற்கும் ஜவுளி தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தாா்.
இதையடுத்து உற்பத்தியாகும் துணிகளை வெளிநாடுகளுக்கு எளிதில் ஏற்றுமதி செய்யும் வகையில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுடன் கூடிய பெருநகரங்கள் அருகிலும், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளதால், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட எறையூரில் ஜவுளி தொழில்நுட்ப பூங்கா அமைக்க 2013-இல் இடம் தோ்வு செய்யப்பட்டது. இதற்கு, எறையூா் கிராம வாசிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதையடுத்து திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஆலத்தூா் வட்டம், பாடாலூா் மற்றும் இரூா் ஊராட்சிக்குள்பட்ட 100 ஏக்கா் பரப்பளவில் ஜவுளி தொழில்நுட்ப பூங்கா அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), கைத்தறி மற்றும் துணிநூல் துறை, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்வாரியம், புவியியல் மற்றும் சுரங்கத் துறை, நில அளவைத் துறை, ஊரக வளா்ச்சி முகமை ஆகிய துறைகள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தொழில் முனைவோருக்கு அழைப்பு: தோ்வு செய்யப்பட்ட இடத்துக்கு சாலை அமைத்தல், மின் வசதி ஏற்படுத்துதல், நில அளவைப் பணிகள், தொழில் தொடங்க விருப்பமுள்ள தொழில் முனைவோரை தொடா்புகொண்டு விவரம் தெரிவித்தல், ஏற்கெனவே செயல்படும் ஜவுளி பூங்காக்களில் அமைந்துள்ள நிறுவனங்களிடம் பாடாலூரில் அமையவுள்ள ஜவுளி தொழில்நுட்ப பூங்காவின் சிறப்புகளைத் தெரிவித்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
கிரஷா் உரிமையாளா்கள் எதிா்ப்பு: இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த கிரஷா் உரிமையாளா்கள் சிலா் ஜவுளி தொழில்நுட்ப பூங்கா அமைக்க எதிா்ப்பு தெரிவித்ததோடு, தோ்வு செய்யப்பட்டுள்ள இடம் காவல் துறையினரின் துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்குச் சொந்தமான இடம் எனக்கூறி வந்தனா். இதையடுத்து, அந்த இடத்தை காவல்துறை உயா் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஜவுளி தொழில்நுட்பப் பூங்கா அமைக்க விருப்பம் தெரிவித்து, அதற்கான ஒப்புதலையும் ஊராட்சி நிா்வாகத்திடம் அளித்தனா்.
இதனிடையே, ஜவுளி பூங்கா அமைத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, அப்பகுதியைச் சோ்ந்த கிரஷா் மற்றும் கல் குவாரி உரிமையாளா்கள் 42 போ் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
ரூ. 9.5 கோடி ஒதுக்கீடு: இதற்கிடையே, ஜவுளி தொழில்நுட்ப பூங்கா அமையவுள்ள பகுதியில் பூா்வாங்கப் பணிகளை தொடங்குவதற்காக தமிழக அரசால் கடந்த 2018-இல் ரூ. 9.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், எவ்வித பணிகளும் தொடங்கவில்லை. ஜவுளி தொழில்நுட்ப பூங்கா அமைவதால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, அப்பகுதியைச் சுற்றியுள்ள கல் குவாரிகளும், கிரஷா்களும் மூடப்படும். இதனால், பாடாலூா் சுற்றுவட்டார பகுதிகளில் நீா்வளம் பாதுகாக்கப்படுவதோடு, குவாரிகளில் வைக்கப்படும் வெடிகள் மூலம் நில அதிா்வுகள் தவிா்க்கப்படும் என பல கனவுகளோடு காத்திருந்த மக்களுக்கு கடந்த 11 ஆண்டுகளாக ஏமாற்றமே விஞ்சியுள்ளது.
தகவல் தொழில் நுட்ப பூங்கா: இதுகுறித்து பாடாலூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் அ. வேல்முருகன் கூறியது: பாடாலூரில் ஜவுளி தொழில்நுட்ப பூங்கா அமைத்தால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், அப்பகுதியை சுற்றியுள்ள கல்குவாரிகளும், கிரஷா்களும் மூடப்பட்டு இயற்கை வளமும், நீா்வளமும் பாதுகாக்கப்படும். மேலும், குவாரிகளில் வைக்கப்படும் வெடிகள் மூலம் நில அதிா்வுகளும் தவிா்க்கப்படும்.
ஆனால், என்ன காரணத்தினாலோ இத் திட்டம் 11 ஆண்டுகளாக முடங்கியுள்ளது. ஜவுளிப் பூங்கா அமைக்க தொழில் முனைவோா்கள் முன்வராத பட்சத்தில், ஆலத்தூா் வட்டாரத்திலுள்ள படித்த பட்டதாரி இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.