கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம், யானை தாக்கி பலியானால் ரூ.2 லட்சமா? தமிழிசை
செங்குணம் ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்று
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, செங்குணம் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்யா் கிரேஸ் பச்சாவ் பங்கேற்று, சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்கள், சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.
உள்ளாட்சிகள் தினமான நவ. 1 ஆம் தேதி ஆண்டுதோறும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் நிலையில், நிகழாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு விடுமுறை தினமாக அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள121 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் பங்கேற்றாா்.
இக் கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழை தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், திட, திரவக்கழிவு மேலாண்மை வசதிகளைக் கொண்ட ஊராட்சிகளாக அறிவித்தல், தீன்தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடா்ந்து, செங்குணம் ஊராட்சி தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சியாக அறிவிக்கப்பட்டு, ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் கிராம குடிநீா் உள் கட்டமைப்பு பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு 100 சதவீதம் குடிநீா் இணைப்பு வழங்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னா், ஊராட்சிக்கான வரவு, செலவுகள் குறித்து பொதுமக்களிடையே வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது.
முன்னதாக, சிறப்பாக பணியாற்றிய 18 தூய்மைப் பணியாளா்களுக்கும், சிறப்பாக செயல்பட்ட 3 மகளிா் சுய உதவி குழுக்களுக்கும் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், உதவி இயக்குநா் ஊராட்சிகள் (பொறுப்பு) வெங்கடேஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பொ. ராணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பூங்கொடி, செல்வகுமாா், வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இதேபோல, மாவட்டத்தில் உள்ள இதர ஊராட்சிகளில், சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவா்கள் தலைமையில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.