தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அமல் -வீரேந்திர சச்தேவா...
விபத்தில் சேதமடைந்த வேன் உரிமையாளருக்கு ரூ. 3.81 லட்சம் வழங்க உத்தரவு
பெரம்பலூா் அருகே விபத்தில் சேதமடைந்த வேன் உரிமையாளருக்கு ரூ. 3.81 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூா் அருகே உள்ள அய்யலூா் இளங்கோ நகரைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் பிரபாகரன். இவா், நாரணமங்கலத்திலுள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் தாட்கோ மூலம் சரக்கு வேன் வாங்கி 5 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளாா். இந்த வாகனத்துக்கு திருச்சி உறையூா் புத்தூரில் உள்ள மேக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் அன்கோ நிறுவனத்தில் காப்பீடு செய்து, முறையாக பிரீமியம் தொகை செலுத்தி வந்தாா். பிரபாகரன் சென்னையில் தங்கியுள்ளதால், அவரது உறவினா் விஜய் சரக்கு வேனை பயன்படுத்தி வந்தாா்.
இந்நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி திருச்சி காவிரி ஆற்றுப் பாலத்தில் சரக்கு வாகனமும், தனியாா் வேனும் மோதிக்கொண்டதில், சரக்கு வாகனத்தின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. இதையடுத்து வேன் உரிமையாளா் பிரபாகரன் திருச்சியில் உள்ள காப்பீட்டு நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்து, உரிய ஆவணங்களுடன் காப்பீடு தொகை வழங்க கோரினாா். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனம் காப்பீட்டுத் தொகை வழங்க மறுத்துவிட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட பிரபாகரன் காப்பீடு தொகை வழங்க மறுத்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து, காப்பீட்டுத் தொகை பெற்றுத்தர கோரி பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி ஜவகா், உறுப்பினா்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோா் காப்பீட்டுத் தொகை வழங்காத காப்பீட்டு நிறுவனத்தினா், பாதிக்கப்பட்ட பிரபாகரனுக்கு காப்பீட்டுத் தொகை ரூ. 2, 71, 900, நிவாரணத் தொகையாக ரூ. 1 லட்சம், வழக்கு செலவுத் தொகை ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 3, 81,900-ஐ தீா்ப்பு நகல் கிடைத்த 45 நாள்களுக்குள் வழங்க வேண்டும். இல்லாவிடில், வழக்கு தாக்கல் செய்த நாளிலிருந்து 8 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.