பாபா சித்திக் கொலை: பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் மூலம் துப்பாக்கிகள் வந்தனவா? காவல்துறை தீவிர விசாரணை
மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக், கடந்த 12ம் தேதி அவரது மகனின் அலுவலகத்திற்கு வெளியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
நடிகர் சல்மான் கானுடன் நெருக்கமாக இருந்தார் என்ற காரணத்திற்காகவும், தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதற்காகவும் பாபா சித்திக்கை கொலை செய்ததாகக் குஜராத் சிறையிலிருக்கும் டெல்லி மாபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் நேரடியாக மூன்று பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் துப்பாக்கியால் சுட்ட சிவ்குமார் கெளதம் என்பவர் தலைமறைவாக இருக்கிறார். அவருடன் இருந்த ஹரியானாவைச் சேர்ந்த குர்மைல் சிங், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புனேயில் சதித்திட்டம்
கொலையாளிகளுக்குப் பணம் மற்றும் துப்பாக்கி கொடுத்து உதவிய புனேயைச் சேர்ந்த பிரவின் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது சகோதரர் சுபம்தான் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தோடு தொடர்பு வைத்துள்ளார். சுபம் இப்போது தலைமறைவாக இருக்கிறார். சுபமும், பிரவீனும் சேர்ந்து கொலையாளியுடன் புனேயில் உள்ள தங்களது பால் பண்ணையில் சதித்திட்டத்தில் ஈடுபட்டது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேரைத் தேடி வருகின்றனர். முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சீசன் அக்தர்தான் அனைத்து குற்றவாளிகளுடனும் தொடர்பில் தொடர்பிலிருந்துள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து வாங்கினார்களா?
பாபா சித்திக்கை கொலை செய்ய 3 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக ஆரம்பத்தில் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால், இப்போது மேலும் ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிகளை லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் மூலம் வாங்கினார்களா என்பது குறித்து மும்பை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனை உறுதி செய்வதற்காகப் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி படங்களை ராஜஸ்தானிற்குக் காவல்துறைக்கு அனுப்பி இருக்கின்றனர்.
பாபா சித்திக் படுகொலை தொடர்பாக லூதியானாவில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுஜித் சுஷில் சிங் என்ற அந்த நபர் மும்பை காட்கோபரில்தான் வசித்து வந்தார். பாபா சித்திக் படுகொலைக்குப் பிறகு தலைமறைவாக இருந்தார். அவர் தேடப்படும் சீசன் அக்தருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்றும், பாபா சித்திக் கொலையாளிகளுடன் நிதி பரிவர்த்தனையில் ஈடுபட்டார் என்றும் மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY