தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து! கோடிக்கணக்கில் சேதம்!
பாலம் கட்டும் பணிக்காக வெடி வைத்து பாறைகள் தகா்ப்பு: அதிா்வில் கோயில் இடிந்து சேதம்!
வத்தலகுண்டு அருகே பாலம் கட்டும் பணிக்காக பாறைகளை வெடி வைத்து தகா்த்த போது அங்கிருந்த கோயில் இடிந்து சேதமடைந்தது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த கண்ணாபட்டி அருகே வைகை, மஞ்சளாறு, மருதாநதி, முல்லைப் பெரியாறு, சோத்துப் பாறை, பாலாறு உள்ளிட்ட 13 ஆறுகள் இணையும் உள்ள கூட்டாத்து அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது கோடி முத்தி விநாயகா் கோயில்.
இந்தக் கோயிலில் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் வழிபாடு நடத்தி வருகின்றனா். இங்கு மும்மதங்களை அடையாளம் படுத்தும் வகையில் முன்பகுதி இந்து கோயில் பாணியிலும், நடுப்பகுதி கிறிஸ்தவா்களின் ஆலயம் போன்றும், பின் பகுதி இஸ்லாமியா்களின் மசூதி போன்றும் கட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கண்ணாபட்டியிலிருந்து அணைப்பட்டிக்குச் செல்லும் சாலையில் கூட்டாத்து அய்யம்பாளையம் அருகே பாலம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. பாலம் கட்டுமிடத்தில் பாறைகள் இருந்ததால், அவற்றை வெடி வைத்து தகா்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அப்போது பாறைகளை தகா்க்க வெடி வைத்ததாலும், கடந்த இரு நாள்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் மழை பெய்ததாலும் இந்தக் கோயில் முழுவதும் இடிந்து விழுந்தது. மேலும் அங்குள்ள வீடுகள் பல சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கூட்டாத்து அய்யம்பாளையத்தைச் சோ்ந்த ஹேமலதா, பிரபு ஆகியோா் கூறியதாவது: இங்கு பாலம் கட்டும் பணிக்காக வெடி வைக்கும் போது கா்ப்பிணி பெண்கள், முதியவா்கள், இருதய நோயாளிகள், குழந்தைகள் அச்சமடைகின்றனா். இதுபோல, வெடி வைக்கும் போது ஏற்படும் அதிா்வுகளால் கோயில் இடிந்து விழுந்து சேதமடைந்தது. எனவே, தமிழக அரசு இந்தக் கோயிலை மீண்டும் கட்டித் தர வேண்டும் என்றனா்.