Inbox 2.0 : Eps 13 - `அந்த 1500 பேருக்கு நன்றி!' | Cinema Vikatan
பாலய்யா வஸ்தாவய்யா: லோகேஷ், சிவகார்த்திகேயன், கமல் - இது வேற லெவல் பாலய்யா
நம்ம பாலய்யாவின் அடுத்த ரிலீஸ் `டாகு மகாராஜ்' டீசரைப் பார்த்துட்டீங்களா..? என்னது பார்க்கலையா..? உடனே ஓடிப்போய் பார்த்திடுங்க!
ஆந்திரா - தெலங்கானாவில் ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு 'ஜனவரி 12- சங்கராந்தி' ரிலீஸாக ரசிகர்களைக் குஷிப்படுத்த வருகிறார் 'டாகு மகாராஜ்' பாலய்யா! புனைவாக எழுதப்பட்ட வரலாற்று சினிமா என்கிறார்கள். கொள்ளையனாக இருந்து சாம்ராஜ்யத்தைப் பிடிக்கும் ஒரு சாமானியனின் கதையாம் இது!
டாகு மகாராஜ் இருக்கட்டும்... 64 வயதிலும் பாலய்யாவைக் கோபப்படுத்தும் 'டாக்கு' என்ன தெரியுமா? வேறென்ன... `ட்ரோல்கள்' தான்!
தன்னைப் பற்றி வரும் ட்ரோல்களை யாரேனும் கொண்டு வந்து செல்போனில் காட்டினால் செமையாய் டென்ஷன் ஆகிடுவார் பாலய்யா. காமெடியைக் காமெடியாகப் பார்க்கும் அளவுக்கு அவர் பொறுமைசாலி இல்லை.
''யாருடா நீவு... கானி நான் சாஃப்ட் நேச்சரு காது... டெரர் டெர்மினேட்டரு!'' என்று தொடையைத் தட்டி உதவியாளரை ஒரு எத்துவிட்டால் எட்டடி தூரத்துக்குப் பறந்துபோய் விழவேண்டியதுதான்!
அப்போ, பாலய்யாவுக்கு ஜோக்கே பிடிக்காதா..? அதான் இல்லை. பாலய்யாவே சிரித்த எவர்க்ரீன் ஜோக் ஒன்று உண்டு. அக்மார்க் சர்தார்ஜி பிராண்ட் ஜோக் அது. பகவந்த் கேசரி ஆடியோ லாஞ்ச் ஃபங்ஷனில், அவரே சிலாகித்து இதைச் சொன்னார்.
``ஒரு முறை நான் ஜம்மு காஷ்மீருக்கு ஹைதரபாத்திலிருந்து ரயில் மார்க்கமாகச் சென்றேன். ஆனால், ஏங்கெல்லாம் ஜங்ஷன்ல ரயில் நிக்குதோ இறங்கி ஓடிப்போய் அடுத்த ஜங்ஷனுக்கு புதுசா டிக்கெட் எடுத்துட்டு பயணத்தைத் தொடர்ந்தேன். நான் அப்படிச் செய்வதற்குக் காரணம் ஒன்று இருக்கிறது. அதைக் கடைசியில் சொல்கிறேன். அதே கம்பார்ட்மெண்ட்டில் என்னுடன் பயணித்த எல்லோருக்கும் ஒரே குழப்பம். `ஏன் இந்தப் பாலய்யா இப்படி பண்ணுறாரு..? நாலு ஸ்டேஷனுக்கு ஒருவாட்டி இந்த ஆளுக்கு என்னாச்சுரா?' என்று யோசித்தபடி தயங்கித் தயங்கி என்னிடமே வந்து சந்தேகத்தைக் கேட்டனர்.
``ஓ... அதுவா..? கால்ல சின்னதா ஆபரேஷன் பண்ணினேன். டாக்டர் நீண்ட தூரப் பயணங்களை தவிர்க்கச் சொல்லிட்டார். அதான்!'' - இதைச் சொல்லிவிட்டு மேடையில் அதிர்ந்து சிரித்திருக்கிறார் பாலய்யா. ஆம். பாலய்யாவுக்கு சின்னதாய் ஜோக் கேட்டாலும் இப்படித்தான் குழந்தைபோல் மாறி அதிர்வேட்டாய் சிரித்து விடுவார்!
பெரிய ஆட்களுக்குத்தான் கோபக்கார கோங்குரா... ஆனால், குழந்தைகளுக்கு இல்லை. எங்கு போனாலும் குழந்தைகளோடு ஃப்ரெண்ட் ஆகிடுவார். முன்பு ஒருமுறை ஒரு விழாவில் குழந்தையைச் செல்லமாகத் தட்டி, அக்குழந்தை வீறிட்டு அழுதுவிட பாலய்யாவுக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. அதனால் இப்போதெல்லாம் குழந்தைகளிடம் அவர்கள் மொழியிலேயே இறங்கி வந்து பேசுகிறார். சினிமாவில் சூப்பர்மேனைப்போல இருந்தாலும் குழந்தைகளுக்கு அவர் சோட்டா பீம் போலத்தான்!
சமீபத்தில்கூட 'ஆஹா' ஓடிடி சேனலுக்காக 'Unstoppable with NBK' சீசன் 4 என்ற சினிமா பிரபலங்களை பேட்டி காணும் நிகழ்ச்சியை சக்சஸ்புல்லாக வழங்கி வருகிறார். நிகழ்ச்சிக்கு தன் மகள் அர்ஹாவோடு வந்திருந்தார் அல்லு அர்ஜுன். தெலுங்கில் 'பாராயணம்' போல் கவிதை நடையில் பேசிய அர்ஹாவை வாஞ்சையோடு முத்தம் கொடுத்து வாழ்த்தினார் பாலய்யா.
``நான் சின்ன வயசுல என் அப்பாவை ரொம்பவே மிஸ் பண்ணினேன். பெரிய குடும்பம் என்பதால் எனக்கென்று ஸ்பெஷல் அட்டென்ஷன் யாரும் கொடுத்ததில்லை. சொல்லப்போனால் அப்பா என்னைப் பார்த்து என் தலைமுடியைக் கலைத்து விட்டு செல்லமாக முத்தம் கொடுப்பாரா என்று பலநாட்கள் ஏங்கியிருக்கிறேன்!'' என்று போகிறபோக்கில் நிகழ்ச்சியில் சொல்ல, `இந்த கல்லுக்குள் ஈரமா!' எனப் பலருக்கும் ஷாக்!
அதேபோல பாலய்யா தன்னைச் சந்திக்க வரும் ரசிகர்களிடம் குழந்தைகள் இருந்தால் அழைத்து வரச் சொல்லுவாராம். மோட்டிவேஷனலாக பேசி அனுப்பி வைப்பதில் அதீத ஆர்வம் அவருக்கு!
ஆனால், வேறொரு விஷயத்தில் நம்ம ஏ.கே (அஜித்) போலத்தான் என்.பி.கே (பாலய்யா)! ஆம். ஓவர் எமோஷனலாகி தன்னிடம் நெக்குருகும் ரசிகர்களைக் கடிந்து கொள்வார்.
``நான் நடிக்கிறேன். அதுக்கு நல்ல சம்பளம் வருது. ரசிகனா கைதட்டுறீங்க. ரசிச்சுக் கொண்டாடுறீங்க. அது போதும். அப்பா மாதிரி நான் கடவுள் அவதாரம்லாம் இல்லை. அப்பா கால்ல நாம விழுறதுக்காகவது ஒரு லாஜிக் இருக்கு. அவர் கிருஷ்ணராவே மனசால வாழ்ந்தவர். ஆனால், நான் நல்லதும் கெட்டதும் கலந்த சாதாரண மனுஷன். என் கால்ல விழுறது, என்னைப் பார்க்குறதே வாழ்நாள் சாதனை போல நினைச்சுட்டு வந்தீங்கன்னா அடி விழும்!'' என்று தனியாக அழைத்து எச்சரித்து அனுப்புவார். ஆனால், மறக்காமல் குழந்தைகளுக்கு நிறைய சாக்லெட் கொடுத்து, பணம் கொடுத்து அனுப்பி வைப்பார்.
பாலய்யாவுக்கு பிடித்த விஷயம் குழந்தைகள் சரி... பிடிக்காத விஷயம் உண்டு என்றால் அது சாப்பாட்டை விரயம் பண்ணுவது!
''இந்த உலகமே போஜனத்துல தான் இயங்குது. நாம வாழ்றதுக்குத் தேவையான சக்தியைத் தர்றதே போஜனத்துல தான். அதுக்காகத்தான் மாடு மாதிரி மனுஷன் உழைக்கிறான். சாப்பிட ஏதுமில்லாதவனுக்கு அகோரப் பசியா இருக்கும். சாப்பிட வகைவகையா வெச்சிருக்குறவனுக்கு பசிக்காது. அதனால நமக்கு உணவு தடையில்லாம கிடைக்குதுன்னா அதை முழுசா சாப்பிடணும். இல்லைனா கொஞ்சமா எடுத்துவெச்சு சாப்பிடணும். `கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டா யானையவே சாப்பிடலாம்'னு ஒரு பழமொழி உண்டு. அதுதான் இப்போ தேவை. பேராசைல நம்ம தட்டுல நிறைய போட்டுட்டு சாப்பிடமுடியாம அதைக் குப்பைல கொட்டுறது இருக்கே... மகா பாவம்!'' என்று சொல்வார் பாலய்யா.
அதேபோல சாப்பாட்டு விஷயத்தில் அவர் இளமைக்காக எம்.ஜி.ஆர் ஸ்டைலில் தங்க பஸ்பம் சாப்பிடுவதாக ஒரு வதந்தி உண்டு. வாரத்துக்கு ஒருமுரை தங்க பஸ்பம் சாப்பிடுவார் என்றெல்லாம் கொளுத்தி விட்டார்கள். அதை யார் கிளப்பி விட்டது என்றுதான் தெரியவில்லை. 64 வயதில் கிண்ணென்ற உடம்புக்குக் காரணம் தங்க பஸ்பம் தான் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். இதை அண்மையில் மறுத்திருக்கிறார் பாலய்யா.
``தங்க பஸ்பத்தை நான் பார்த்ததுகூடக் கிடையாது. நான் சாப்பாட்டுப் பிரியன் மட்டும் தான். ஆனால், இப்போது அளவாக சாப்பிடுகிறேன். 60 வயதைத் தாண்டியவுடன் கொஞ்சம் உணவுக் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டேன். என் மகள்களின் ஸ்ட்ரிக்கான உத்தரவு தான் உணவுக்கட்டுப்பாட்டுக்குக் காரணம்!'' என்று சொன்னவர், அண்மையில் `அன்ஸ்டாப்பபுள்' நிகழ்ச்சியின் பிரேக்கில் மைக்கை ஆஃப் செய்யாமல் தன் வீட்டு சமையல்காரரிடம் தனக்கு பிரேக் ஃபாஸ்ட், டின்னர் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது செம வைரலாகிவிட்டது.
காலை டிபனுக்கு ஊத்தாப்பம், பாம்பே ரவா உப்புமாவும் அதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியும் செய்யச் சொன்னார். இரவுக்கு சாதத்துக்கு ஓம ரசமும், அதற்குத் தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு மசியல், காலிஃபிளவர் கூட்டு, ஆவக்காய் வறுவலும் செய்யச் சொன்னார்.
'ஓஹோ... மன பாலய்யா... இம்புட்டு சிம்பிளா?' என்று புகழ்ந்து தள்ளுகின்றனர் மனவாடுகள். ஆனால், தாறுமாறாய் கூடிய எக்ஸ்ட்ரா லக்கேஜ் சதையைக் கரைக்கத்தான் சிம்பிள் மெனுவுக்கு மாறிவிட்டார் பாலய்யா என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம். உடம்பைக் குறைத்து என்ன செய்யப்போகிறார் என்று கேட்பவர்களுக்கு அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் பதில் சொல்லியிருக்கிறார்.
``எனக்கு வயது கூடக்கூட பொறுப்புகள் கூடிக்கொண்டே வருகிறது. ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மக்களுக்குப் பிடித்த ஆளாக மாறிவிட்டேன். ஆனால், நடிகனாக, இன்னும் கமல் ஹாசன், அமிதாப் பச்சன், மம்மூட்டி, மோகன்லால் போல நான் பெரிய சவாலான ரோல்களைச் செய்யவில்லை. கார்களை பறக்கவிடுவது, ஆட்களை அலேக்காகத் தூக்கி வீசுவதெல்லாம் 70 வயது வரை பண்ண வேண்டுமா என்ன..? அல்லது பண்ணத்தான் முடியுமா? எனக்கு சண்டைபோட்டு போரடித்து விட்டது. படம் பார்க்கும் மக்களை கலங்கடிக்கும் ஒரு நடிப்பை வழங்கவேண்டும் என்பது என் ஆசை. விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்!'' என்று அந்த டிவி நிகழ்ச்சியில் பாலய்யா சொன்னதைக் கேட்டு நிஜமாகவே ஆச்சர்யமாக இருக்கிறது.
பாலய்யாவுக்கு இன்னொரு ரகசிய ஆசையும் உண்டு. அது தன் பால்யத்தில் மறக்க முடியாத விஷயங்களை அள்ளித் தந்த தமிழ்நாட்டில் தமிழ்ப் படங்களில் தமிழ் பேசி நடிக்க வேண்டும் என்பதுதான்!
ஏற்கனவே `ஜெயிலர்' படத்தில் ரஜினியோடு நடிக்க வாய்ப்பு வந்தது. கடைசி நிமிடத்தில் நடிக்க முடியாமலும் போனது. பாலய்யாவின் நடிப்புக்குத் தீனி போடும் ஒரு வாய்ப்பை தமிழ் இயக்குநர்கள் தருவார்கள் என்று உறுதியாக நம்புகிறார் பாலய்யா. அதனால் முன்பு எப்போதாவது தான் தமிழ்ப் படங்கள் பார்ப்பார். ஆனால், இப்போது அடிக்கடி தமிழ்ப்படங்களை தியேட்டர்களிலும், ஓடிடியிலும் பார்த்து விடுகிறார். சமீபத்தில் `அமரன்' படத்தைப் பார்த்து ரசித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜின் படங்கள் மிகவும் பிடிக்கும் என்கிறார்கள். தெலுங்கில் மகேஷ்பாபுவோடு நடிக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழில் இளம் நாயகர்களோடு நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இதை தன் மேனேஜர்களிடமும் பி.ஆர்.ஓக்களிடமும் வெளிப்படையாகவே சொல்லிவிட்டதால் பாலய்யாவுக்கு நெருக்கமான சென்னை நண்பர்கள் பாலய்யாவுக்காக தமிழ் சினிமாவில் கதையைக் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். விரைவில் சிவகார்த்திகேயன் போன்ற இன்றைய இளம் ஹீரோக்களின் படங்களில் பாலய்யா ஆக்ஷன் அதகளம் செய்வதை நாம் எதிர்பார்க்கலாம்.
பாலய்யாவுக்கு சென்னையில் இருக்கும் இன்னொரு திரை ஆளுமையை ரொம்பவே பிடிக்கும். அவரும் தெலுங்குக்காரர் என்பதால் அவருடன் சேர்ந்து இரண்டு படங்களும் பண்ணிவிட்டார். அது வேறு யாருமல்ல சிங்கிதம் சீனிவாச ராவ் தான். 'ஆதித்யா 369', ' பைரவ தீபம்' என்ற இரண்டு படங்கள் பண்ணிவிட்டாலும் இப்போதும் சிங்கிதம் சீனிவாச ராவுடன் போனில் அடிக்கடி பேசி நலம் விசாரிக்கவும், முடிந்தால் சர்ப்ரைஸாக சென்னைக்கு நேரில் வந்து பார்த்துவிட்டும் செல்கிறார் பாலய்யா.
கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த காமெடிப்படங்கள் தான் அவரது ஏகபோக சாய்ஸ். அதிலும் குறிப்பாக `மைக்கேல் மதன காம ராஜன்' படத்தை டிவியில் பார்த்து வீடு அதிரும் சிரிப்பை உதிர்ப்பது வாடிக்கை. 'மைக்கேல் மதன காம ராஜன்' படத்தை அத்தனை சிலாகிப்பார் பாலய்யா.
``கமல் சாரெல்லாம் பெரிய லெஜண்ட். காமெடி இஸ் எ சீரியஸ் பிசினெஸ்னு சொல்லுவாங்க. டைமிங்கில் காமெடி பண்ணி அசத்துவது அத்தனை சுலபமல்ல. கொஞ்சம் மிஸ்ஸானாலும் சிரிப்பு வராமல் போய்விடும். ஆனால், கமல் டைமிங்கில் கில்லாடி. என்னால் ஆக்ஷனில் என்னவெண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால், காமெடியில் கமல் சார் செய்ததில் 10 சதவிகிதம்கூட செய்ய முடியாது!'' என்று ஓப்பனாகவே ஸ்டேட்மென்ட் விட்டு சில்லரையை சிதறவிட்டுள்ளார் பாலய்யா. ஆக, மொத்தத்தில் அவர் கமல்ஹாசன் ஃபேன் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. லோகேஷ் கனகராஜ் மீதும் மதிப்பு இருக்கிறது. கமல் மீது இத்தனை மரியாதை கொண்டவர் இருவரின் காம்போவில் இணையும் வாய்ப்பு வந்தால்..?
ஆஹா... காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!
(தோட்டா தெறிக்கும்...)