செய்திகள் :

பாலய்யா வஸ்தாவய்யா- 14: 'உர்ரே... எனக்கு காது நல்லா கேட்கும்ரா!' -பாலய்யா பற்றிய வதந்திகள்

post image
பாலய்யா பற்றி வந்த மிகப்பெரிய வதந்திகள் பற்றி இந்த எபிசோடில் பார்க்கலாமா?

ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். இதெல்லாம் தெலுங்கு இன்டெஸ்ட்ரியில் சூறாவளியாய் சுற்றியடித்த பாலய்யா பற்றிய வதந்திகள். அதற்கு அவர் தரப்பில் 'வதந்தி' என்று விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், இப்போதும் சிலர், 'அதெல்லாம் உண்மையன்றி வேறில்லை!' என ஷேர் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். பாலய்யா இந்த விஷயத்தில் கொஞ்சம் முசுடு தான். அவரது அப்பா என்.டி.ஆர், தன்னைப் பற்றி வரும் வதந்திகளை பெரிதாய் கண்டுகொள்ள மாட்டார். ஆனால், பாலய்யாவைப் பொறுத்தவரை வதந்திகளை வதந்'தீ'களாகத்தான் பார்ப்பார்.

"பேரு பெத்த பேரு...

தாக நீள்ளு லேது..!"

- ஆள்தான் பெரிய ஆளு... குடிக்க தண்ணிகூட அவர் கையால் கிடைக்காது. இந்தச் சொலவடையை ஆந்திரா பக்கம் பாலய்யாவை குறிப்பிட்டு அவருக்கு ஆகாதவர்கள் சொல்வார்கள். இங்கு எப்படி தமிழ்நாட்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை எட்டாவது வள்ளலாக கொண்டாடிய மீடியாக்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசனை 'எச்சில் கையால் காகா ஓட்டமாட்டார்!' என்ற சொலவடையை வைத்து அந்தக் காலத்திலேயே வன்மத்தைக் கக்கியதோ அதன் தெலுங்கு வெர்ஷன் தான் மேலே சொன்ன அந்தத் தெலுங்கு சொலவடை!

'அப்பா தேவுடுகாரு போல தான தர்மம்லாம் பெருசா பண்ண மாட்டாரு!' என்பது பாலய்யா மீது சிலர் வைக்கும் குற்றச்சாட்டு.

இங்கே எப்படி சிவாஜி சத்தமில்லாமல் அன்னதானம், கல்விக்கான உதவிகளை செய்து வந்தாரோ அதேபோல பாலய்யாவும் இடதுகை கொடுப்பது வலதுகைக்குத் தெரியாத வண்ணம் உதவிகள் செய்துவருகிறவர் தான். அவரை நன்கு அறிந்தவர்களுக்கு அவர் அப்படிச் செய்யும் விஷயம் நன்கு தெரியும்!

தன்னைப் பற்றி வரும் விமர்சனங்களைப் பற்றி, "உலைவாய மூடலாம்...ஊர்வாய மூட முடியாதுடா யப்பா!" என்று சிவாஜி சொல்வது வழக்கம். ஆனால், பாலய்யா கொஞ்சம் வித்தியாசமானவர்.

"நாம் அமைதியாக இருக்கும் பட்சத்தில் நம்மீது வைக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டும் உண்மையாகக் கருதப்படும்!"- இது பாலய்யாவின் அகாதுகா ஸ்டேட்மெண்ட்.

இது போன்ற வதந்திகளைப் பரப்புகிறவர் இன்னார்தான் என்று தெரிந்துவிட்டால் கூப்பிட்டு கண்டிப்பார். நேரிலிருந்தால் கொஞ்சம் அதட்டல் உருட்டலில் சாவு பயத்தைக்காட்டிவிடுவார். ஆனால், அதைத்தாண்டி மோசமாக நடந்து கொள்ள மாட்டார். ஆனால், வேண்டுமென்றே வம்பு வளர்ப்பவர்கள் மீதுதான் கைவைக்கும் அளவுக்குப் போவார். 'நான் சத்தமில்லாமல் உதவி செய்றவன்!' என்று சத்தம்போட்டு சொல்லத் தெரியாதவர் நம் பாலய்யா. ஒரு கட்டத்தில் சிவாஜி மோடுக்கு மாறிவிட்டார்.

'என்ன வேணும்னாலும் சொல்லிக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்' மோடுக்கு மாறிவிட்டார்.

ஆனால், இப்போது நான் சொல்லப்போகும் செய்தி அவரைப் பற்றிய ஒரு வதந்திதான். ஆரம்ப காலத்தில் ரொம்பவே அவரைப்

பாடாய்ப்படுத்திவிட்டது எனலாம். ஆங்ரி பேர்டாய் சில காலம் மாறி பலபேரை திட்டிவிட்டார்.

ஹீரோவாக நடிக்கத் துவங்கிய தன் ஆரம்ப காலங்களில் பிஸியாக டூயட் பாடி, பறந்து பறந்து ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு தலையில் அடிபட்டு காது கேட்காமல் போய்விட்டதாக யாரோ வதந்திகளை பரப்பிவிட்டார்கள். பார்ப்பதற்கு டிகாஷன் மட்டுமிருந்தால் காபி போட்டுக் குடிக்கலாம். அந்த அளவுக்கு பாலய்யா பேரழகன் தான். முகத்தில் வடியும் பாலை வைத்தே ஒரு ஊருக்கே காபி போட்டுக் கொடுக்கலாம். அப்பேர்ப்பட்ட அழகனைப் பார்த்து பல தாய்மார்கள், `அப்பாவை உறிச்சு வெச்சு தெய்வாம்சமா பொறந்துருக்கு புள்ள... என்ன ஒரு தேஜஸ்' என அழகினை வியந்து கன்னத்தில் போட்டுக் கொண்டிருந்த சமயம். அதே பெண்கள், அந்த வதந்தியை நிஜமென நம்பி, 'இப்படி ஒண்ணைக் கொடுத்து இன்னொன்ணை ஆண்டவன் பறிச்சிக்கிட்டானே!' என உச் கொட்டியதெல்லாம் துன்பியல் சம்பவம் தான்.

`அழகு பட்ட புள்ள பாலய்யா... ரொம்ப பாவம்யா... கடவுளோட அம்சத்தோட தேவுடுக்கு புள்ள பொறந்திருக்கு. ஆனா, கடவுள் இப்படி அந்தப் புள்ளைக்கு காது கேட்காம பண்ணிப்புட்டானே!' என பாலய்யா காதுபடவே கிசுகிசுத்தார்கள். அது இன்னும் பாலய்யாவைக் கடுப்பேற்றியது.

'உர்ரே... எனக்கு காது நல்லா கேட்கும்ரா!' என கத்தாத குறையாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். யாராவது கூப்பிட்டு ஏதோ ஒரு சிந்தனையில் இருந்து தாமதமாகத் திரும்பினால்கூட, `ஒருவேளை இருக்குமோ?' என தனக்கு அப்படி ஒரு பிரச்னையை கடவுளே உருவாக்கிவிட்டாரோ என அவரே பயந்து போய் டாக்டர்களிடம் தன் காதினைக் காட்டிய சம்பவமெல்லாம் கருப்பு சரித்திரம்.

'உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை!' என்று டாக்டர்கள் சொன்னபோதுதான் அவருக்கு உயிரே வந்தது.

பாலய்யா வஸ்தாவய்யா

ஒரு கட்டத்தில் இந்த வதந்தி எப்படி, யாரால் உருவாக்கப்பட்டு செய்தியாக பரவியது என இன்வெஸ்டிகேஷனில் தன் ஆட்களை இறக்கி விட்டார். அவர்கள் கண்டுபிடித்துச் சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ந்து சிரித்தார்.

நிஜத்தில் பாலகிருஷ்ணா என்ற பெயரில் கன்னட சினிமாவில் டி.என்.பாலகிருஷ்ணா என்ற சீனியர் நடிகர் ஒருவர் இருந்தார். பிரமாதமான நடிப்பாற்றல் கொண்ட அவர் ஒரு மாற்றுத்திறனாளி. காது கேட்கும் திறன் குறைவு என்பதால் அவரைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது மீடியாக்களில் வருவதுண்டு. இணையம் முளைக்காத அந்தக் காலத்தில் இந்தச் செய்தி மட்டும் கத்தரிக்காய்க்கு கால் முளைத்த கதையாக ஆள் மாறி இவருக்குத்தான் காது சரியாகக் கேட்காது என்பதாகப் பரவியது.

``திருமாகுடாலு நர்சிபுரா பாலகிருஷ்ணா எனக்குப் பிடித்தமான நடிகர். 1995-ல் தான் மறைந்தார். அவரது படங்களை நானும் பார்த்திருக்கிறேன். அவர் நடிப்பைப் பற்றி என் தந்தை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். காது கேட்காதபோதும் எதிரில் பேசுபவர்களின் உதட்டசைவை வைத்தே அவர் சரளமாக பேசும் திறமையைக் கொண்டிருந்தார். ஆரம்ப காலங்களில் அவருக்கு இருந்த பிரச்னையை எனக்கிருப்பதாக கோர்த்துவிட்டார்கள். எனக்கு அந்தப் பிரச்னையும் இல்லை. அவர் அளவுக்கு நடிக்கும் திறமையும் இல்லை. அவருக்கு இருந்த பிரச்னையை என் பெயரில் எழுதிய ஆள் மட்டும் என் முன்னால் வரட்டும்...பார்த்துக் கொள்கிறேன்!'' என்று பாலய்யா ஓப்பனாக பேசி இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பாலய்யா

அதேபோல பாலகிருஷ்ணா என்றதும் சர்ச்சைகளுக்கு எப்போதும் பஞ்சமில்லை. சமீபத்தில் 'கேங்ஸ் அப் கோதாவரி' ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனில் மேடையில் தனக்கு இடமளிக்காமல் நெருக்கமாக நின்ற நடிகை அஞ்சலியைப் பிடித்து வேகமாக தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை உண்டு பண்ணியது.

இப்படி பொதுமேடையில் பாலய்யா நடந்து கொண்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

"நாடி, நரம்பு, ரத்தம், சதை, தோல், எலும்பு, எலும்பு மஜ்ஜைல ஆணாதிக்க வெறி இருந்தாதான் இப்படி நடந்து கொள்ள முடியும்!" என ஒரு குரூப் சமூக ஊடகங்களில் களமாடி பாலய்யாவை ரோஸ்ட் பண்ணியது. இதுபோல ராதிகா ஆப்தே தலையைத் தட்டியது, விசித்ரா ரூமின் கதவைத் தட்டியது என பல முன்னாள் சம்பவங்களை வரிசைகட்டி ஞாபகப்படுத்தி பாலய்யாவை தோரணம் கட்டி தொங்கவிட்டனர்.

2016-ல் 'சாவித்ரி' படத்தின் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனில் பெருமையாக தன்னைப் பற்றி பேசிய விஷயம் அப்போது பலரை முகம் சுளிக்க வைத்தது.

"நான் ஒரு படத்தில் ஹீரோயின் பின்னால் அவள் காதலுக்காக சுற்றுவது, அவளை ஈவ் டீசிங் செய்வது போல நடித்தால் என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு நான் ஒரு பெண் பின்னால் இப்படி வேலையை விட்டுவிட்டு வெட்டியாக சுற்றுவது எல்லாம் சுத்தமாகப் பிடிக்காது. அவர்களைப் பொறுத்தவரை ஒரு பெண்ணை எனக்குப் பிடித்திருந்தால், நான் அவளுக்கு குறைந்தபட்சம் முத்தமாவது கொடுத்திருக்க வேண்டும். அல்லது அவளை நான் கர்ப்பமாக்கியிருக்க வேண்டும்! இல்லையென்றால் அவர்களுக்கு சுவாரஸ்யம் இருக்காது. சும்மா சுமோக்களைப் பறக்க வைக்க மட்டுமல்ல... இப்படி எதாவது சம்பவங்கள் பண்ணுவதை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்!" - பாலய்யா பொதுமேடையில் இப்படிச் சொன்னால் சும்மா விடுவார்களா..? வறுத்தெடுத்து விட்டார்கள். எவ்வளவு வக்கிரம் இருந்தால் இப்படி சொல்வார் என பொங்கி பாலய்யாவை பொங்கல் வைத்தார்கள்.

பாலய்யா வஸ்தாவய்யா 7

'ஆத்தீ... அவசரப்பட்டுட்டோமோ?' என பாலய்யாவே நிச்சயம் ஜெர்க் ஆகியிருப்பார். பொதுவாக பாலய்யா பற்றி அடிக்கடி வரும் சேதிகள் எல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா?

'தன் உதவியாளரை கன்னத்தில் அறைந்தாரா பாலய்யா?', 'பொது இடத்தில் கால் ஷூவை மாட்டிவிடச் சொன்ன பாலய்யா!' , 'செல்போனை தட்டிவிட்ட பாலய்யா!' - இப்படித்தான் அவரைச் சுற்றி சர்ச்சைகள் அலையடிக்கும். ஆனால், இப்படி பெண்களை அவமதிப்பது, பாலியல் ரீதியான புகார்கள் வந்தால் கொஞ்சம் ஜெர்க் ஆகிவிடுவார்.

தன்னைப் பற்றி வரும் செய்திகளுக்கு கோபமாக ரியாக்ட் பண்ணிவிடக் கூடாது என்பதற்காகத்தான் சமூக வலைதளங்களில் தலைவைத்தும் படுக்கப்போவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார் பாலய்யா. ஆனால், மகன் மற்றும் மகள் அக்கவுண்ட்டின் மூலம் என்னதான் சமூக ஊடகங்களில் ட்ரெண்டாக இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவார்.

மகளுக்காக மட்டும் சில ரீல்ஸ் எடுத்து பிரைவேட்டில் போட்டு வைத்துக்கொள்ள அனுமதித்திருக்கிறார். விளையாட்டாகக்கூட போஸ்ட் போட்டுவிடக்கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டதால் மகளும் அப்பாவின் நம்பிக்கையைக் காப்பாற்றி வருகிறார்.

பாலய்யா

"சமூக ஊடகங்கள் ஒருவர்மீது எளிதாக சேற்றை வாரி இறைக்கவே பயன்படுத்தப்படுகிறது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், ஒரு நொடியில் யாரோ ஒருவர் நினைத்தால் மிகக் கீழ்த்தரமாக அந்த நபரை தரம் கெட்டவராக சித்தரிக்க முடியும் என்பதே பேராபத்து. பொதுப்புத்தியில் யாரோ ஒருவர் சொல்வதைக்கேட்டு வன்மத்தைக் கக்குவது மிகமிக கேவலமான செயல். என்னைப் பற்றி என்னைவிட எனக்குத்தான் நன்கு தெரியும்!" என்கிறார் பாலய்யா.

பாலய்யா இப்போதெல்லாம் கோபத்தை வடிகட்டித்தான் காட்டுகிறார். மகாநதி படத்தில் பூர்ணம் விஸ்வநாதன் சொல்லும், 'சாந்தமு லேகா... சௌக்கியமு லேது!' என்று அமைதி மோடுக்கு மாறிவிட்டார். இளைய தலைமுறைமீது முன்பு உச்சபட்ச எரிச்சலை அள்ளிக் காட்டி வந்தவர் சாஃப்ட் மோடுக்கு மாறிவிட்டார். இப்போதெல்லாம் கொஞ்சம் கரிசனமும் அன்பும் கூடிவிட்டது. அதற்கு சாட்சியாக ஆஹா ஓடிடி தளத்தில் அவர் நடத்தும் டாக் நிகழ்ச்சியில் இளைய தலைமுறையைத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். தன்னைக் கலாய்க்க இடமளிக்கிறார். மனதின் ஆழத்திலிருந்து வெடித்துச் சிரிக்கிறார். வயதுகூடக்கூட பக்குவமும் கூடியிருக்கிறது பாலய்யாவுக்கு! சுருக்கமாக பாலய்யாவின் மொழியில் இப்படிச் சொல்லலாம்...

"I'm aging like fine wine, getting better with time!"

ஜெய் பாலய்யா!

( அதிர்வேட்டுச் சிரிப்பு தொடரும்...)

Pushpa 2 stampede: கூட்ட நெரிசலில் பாதிக்கபட்டு சிகிச்சைப் பெற்று வந்த 9 வயது சிறுவன் மூளைச்சாவு..!

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் டிச - 4 ம்தேதி குவிந்தனர்.அங்குப் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டிருந்த நிலையில், அந்தத் திரையர... மேலும் பார்க்க

Allu Arjun: `பாதிக்கப்பட்ட சிறுவன்; சட்ட நடவடிக்கைகள் காரணமாக..!' - ஜாமீனுக்குப் பிறகு அல்லு அர்ஜூன்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரின் மகன் ஸ்ரீ தேஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்... மேலும் பார்க்க

Allu Arjun: `கவலைப்பட ஒன்றுமில்லை, நான் நன்றாக இருக்கிறேன்' - ஜாமீனுக்கு பிறகு பேசிய அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, கடந்த டிசம்பர் 5-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்று ரச... மேலும் பார்க்க

Allu Arjun Stampede Case : ரசிகை உயிரிழந்த வழக்கு; சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த அல்லு அர்ஜுன்

சிறையில் இருந்து அல்லு அர்ஜுன் வெளியே வந்திருக்கிறார்.'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, கடந்த டிசம்பர் 5-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்று ரசிகர்... மேலும் பார்க்க

Allu Arjun : அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்; 'இப்படியா கைது செய்வது?' - நீதிமன்றம் சொல்வதென்ன?

'புஷ்பா 2' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்கச் சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி (39) உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவம், திரையுலகில் பெரும் ... மேலும் பார்க்க

Allu Arjun: `மீண்டும் மீண்டும்!'- இந்தாண்டில் அடுத்தடுத்து இரண்டு வழக்குகளில் சிக்கிய அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜூன் மீது இந்தாண்டு மட்டும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி `புஷ்பா 2' திரைப்படம் வெளியாகியிருந்தது. அதுமட்டுமல்ல, வெளியான குறுகி... மேலும் பார்க்க