Pushpa 2 stampede: கூட்ட நெரிசலில் பாதிக்கபட்டு சிகிச்சைப் பெற்று வந்த 9 வயது சிறுவன் மூளைச்சாவு..!
'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் டிச - 4 ம்தேதி குவிந்தனர்.
அங்குப் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டிருந்த நிலையில், அந்தத் திரையரங்கிற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்ததால் ரசிகர்கள் கூட்டம் இன்னும் ஆக்ரோஷமானது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி படத்தைப் பார்க்க மனைவி ரேவதி (39), மகன் தேஜா(9), மகளுடன் (7) வந்த பாஸ்கர் குடும்பம் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு காயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே ரேவதிக்கும், மகன் தேஜாவிற்கு 'CPR' சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது எந்தவித பலனும் அளிக்கவில்லை. இருவரும் உடனே உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் சிகிச்சைப் பலனின்றி பாஸ்கர் மனைவி ரேவதி உயிரிழந்தார். அவரது மகன் கவலைக்கிடமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
உயிரிழந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் பணமும், சிகிச்சைப் பெற்று வரும் 9 வயது சிறுவரின் மருத்துவச் செலவை ஏற்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்தச் சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு வருவது குறித்து முறையாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுக்காத திரையரங்க உரிமையாளர்கள் மீதும், முன் அறிவிப்பின்றி திடீரென வந்து கூட்ட நெரிசலுக்குக் காரணமாக இருந்ததாக நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குத் தொடரப்பட்டது. இதில் திரையரங்க உரிமையாளர்களும், நடிகர் அல்லு அர்ஜுனும் கைது செய்யப்பட்டனர். அல்லு அர்ஜுனுக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருந்தது. பிறகு, அன்று மாலையே ஜாமின் பெற்று, மறுநாள் காலை விடுதலையானார்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பலரும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகப் பேசியிருந்தனர். இருப்பினும் அல்லு அர்ஜுன் கைதுபற்றி தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “ஒரு நடிகருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவர் குழந்தைக்கும் ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள். அவர் ஒரு ஹீரோ. ஆனால், அந்த குழந்தை அதன் தாயை இழந்திருக்கிறது. அந்தக் குழந்தையும் உயிருக்குப் போராடி வருகிறது. ஆனால், அதுகுறித்து யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை” என காட்டமாக பேசியிருந்தார்.
இந்த விவகாரத்தில் உயிரிழந்த ரேவதியின் கணவர் பாஸ்கர், தனது வழக்கை வாபஸ் வாங்குவதாகவும், அல்லு அர்ஜுன் கைது செய்யப்படுவதைத் தான் எதிர்ப்பார்க்கவில்லை என்றும் பரபரப்பாகப் பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி தீவிர சிகிச்சைப் பெற்று வந்த 9 வயது சிறுவன் தேஜா இன்று டிச 18-ம் தேதி முளைச்சாவடைந்திருக்கிறார். படம் பார்க்கச் சென்று கூட்ட நெரிசலில் சிக்கி மனைவியைப் பரிகொடுத்த பாஸ்கர், தற்போது தனது 9 வயது மகனையும் பரிகொடுத்திருக்கிறார். அந்தக் கூட்ட நெரிசலில் காயமடைந்த அவரது 7 வயது மகள் நலமுடன் இருக்கிறார்.