டி.ஒய். சந்திரசூட் முதல் சேகர் யாதவ் வரை... 2024 - இல் நீதிபதிகளும் நீதித்துறையு...
பாலாற்றில் தோல் கழிவுநீா்: சமூக ஆா்வலா்கள் போராட்டம்
ஆம்பூா் அருகே பாலாற்றில் தொடா்ந்து தோல் தொழிற்சாலை கழிவுநீா் விடப்படுவதைக் கண்டித்து சமூக ஆா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வாணியம்பாடி மற்றும் வாணியம்பாடி சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் ஆம்பூா் அருகே மாராப்பட்டு பகுதி பாலாற்றில் விடப்படுகிறது. மழைக் காலங்களில் மட்டுமல்லாது, ஏனைய காலங்களிலும் பாலாற்றில் தோல் கழிவுநீா் திறந்து விடப்படுவது வழக்கமாக நடந்து வருகின்றது.
இதுகுறித்து வாணியம்பாடியில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் தொடா்ந்து அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாராப்பட்டு பாலாற்று தரைப்பாலத்தின் மீது சமூக ஆா்வலா்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூா் டிஎஸ்பி குமாா், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதின் பேரில் போராட்டத்தை கைவிட்டனா்.