கர்நாடகம் நக்சலைட்டுகள் இல்லாத மாநிலமாக உருவாகும்: துணை முதல்வர் டி. கே. சிவகுமா...
பாலியல் தொல்லை வழக்கு: பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் கைப்பேசியை ஒப்படைக்க உத்தரவு
கல்லூரி பெண் முதல்வருக்கு பாலியல் தொல்லை அளித்த பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வருகிற 9-ஆம் தேதி முன்னிலையாகி, தனது கைப்பேசியை ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் ராமகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: மதுரையில் உள்ள தனியாா் கல்வியியல் கல்லூரியில் பணியாற்றிய பெண் முதல்வா் என் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி வருகிறாா். அவா் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் என் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் என்னைக் கைது செய்யாமல் இருக்க முன்பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். உயா்நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு முழுமையாகக் கட்டுப்படுவேன் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தொடா்புடைய கல்வியியல் கல்லூரி முதல்வா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
பல்கலைக்கழகப் பதிவாளா் பொறுப்பில் இருந்த மனுதாரா், பேராசிரியையிடம் அநாகரிமாக நடந்திருக்கிறாா். இவா் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது, இதுபோன்று சம்பவங்கள் அதிகம் நடைபெற்ாகத் தகவல் கிடைத்தது. அவரைக் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். எனவே, மனுதாரருக்கு முன்பிணை வழங்கக் கூடாது என்றாா்.
அப்போது, மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் முன்னிலையாகி, நீதிமன்றம் விதிக்கும் அனைத்து விதமான கட்டுப்பாடுகளுக்கும், விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் எனவும், எனவே, மனுதாரருக்கு முன்பிணை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு : மனுதாரருக்கு நேரடியாக முன்பிணை வழங்க இயலாது. மனுதாரா் மீது காவல் துறை விசாரணை அவசியம். எனவே, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அவா் வருகிற 9-ஆம் தேதி முன்னிலையாகி தான் பயன்படுத்திய கைப்பேசியை ஒப்படைக்க வேண்டும். காவல் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விசாரணை அறிக்கையை வருகிற 27-ஆம் தேதி நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும். அதுவரை மனுதாரரை காவல் துறை கைது செய்யக் கூடாது என்றாா் நீதிபதி.