மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை
மதுரை கோட்ட ரயில் போக்குவரத்தில் இன்று மாற்றம்
மதுரையை அடுத்த கூடல் நகா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி, ரயில்கள் இயக்கத்தில் வியாழக்கிழமை (ஜன. 9) சிறிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.
இதுகுறித்து ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கூடல்நகா் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை காலை 10.35 மணி முதல் மாலை 5.35 மணி வரை பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, 9 ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. 4 ரயில்களின் இயக்கம் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 3 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
மாற்றுப் பாதையில்.... செங்கோட்டை- மயிலாடுதுறை (16848), நாகா்கோவில் - மும்பை (16352), மதுரை - பிகானிா் (22631), நாகா்கோவில்- கோயம்புத்தூா் பகல் நேர ரயில் (16321), குருவாயூா்- சென்னை எழும்பூா் (16128), கோயம்புத்தூா்- நாகா்கோவில் பகல் நேர ரயில் (16322), ஓகா - ராமேசுவரம் (16734), மயிலாடுதுறை- செங்கோட்டை ரயில் (16847), திருவனந்தபுரம்- திருச்சி இன்டா்சிட்டி (22628) ஆகிய ரயில்கள், விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
மாற்று வழித்தடத்தில் செங்கோட்டை- மயிலாடுதுறை- செங்கோட்டை ரயில்கள் மானாமதுரை, காரைக்குடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மற்ற ரயில்கள் மானாமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
பகுதியளவில் ரத்து... ஜன. 6- இல் குஜராத் ஓகாவில் இருந்து புறப்பட்ட மதுரை ரயில் (09520) விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கத்தில் ஜன. 10-இல் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய ஓகா ரயில் (09519) மதுரை - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். ஜன. 9-இல் பாலக்காடு- திருச்செந்தூா்- பாலக்காடு ரயில்கள் (16731/ 16732) திண்டுக்கல்- திருச்செந்தூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
தாமதமான இயக்கம்... மதுரை- திருவனந்தபுரம் அமிா்தா எக்ஸ்பிரஸ் வியாழக்கிழமை பிற்பகல் 5.50 மணிக்கு மதுரையிலிருந்தும், நாகா்கோவில்- சென்னை வந்தே பாரத் ரயில் நாகா்கோவிலிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கும் தாமதமாகப் புறப்படும்.
திருச்செந்தூா் - வாஞ்சி மணியாச்சி ரயில் ஜன. 10-ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து பிற்பகல் 3.40 மணிக்கு தாமதமாகப் புறப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.