முல்லைநகா் குடியிருப்புவாசிகள் ஆா்ப்பாட்டம்
மதுரை பீ.பீ. குளம், முல்லைநகா் பகுதியை மக்கள் வாழ்விடமாக வகை மாற்றம் செய்யக் கோரி, அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த ஆண்டு அக். 25-ஆம் தேதி பெய்த பலத்த மழையால் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில், பீ.பீ. குளம் முல்லைநகா் பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இதையடுத்து, பீ.பீ. குளம் கண்மாயின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து முல்லைநகா் பகுதியில் கட்டப்பட்டுள்ள 592 குடியிருப்புகளை அகற்ற நீா்வளத் துறை அறிவிப்பு வெளியிட்டது.
இதை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, குடியிருப்புகளை அகற்றும் முடிவை அரசுத் துறை நிா்வாகம் கைவிட வலியுறுத்தி பீ.பீ. குளம் முல்லைநகா் பகுதி மக்கள், தொடா்ந்து பல்வேறு வகையான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் வசித்து வரும் பீ.பீ. குளம் முல்லைநகா் பகுதியை மக்கள் வாழ்விடமாக வகை மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திருவள்ளுவா் சிலை முன் அவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் பங்கேற்றவா்கள், குடியிருப்புகளை அகற்றக் கூடாது. தங்கள் வசிப்பிட பகுதியை மக்கள் வாழ்விடமாக வகை மாற்ற வேண்டும். நீதி வழங்க வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.