செய்திகள் :

பால் தாக்கரே இறந்தபிறகு அவரது கைரேகையை எடுத்தாரா உத்தவ்? - ஷிண்டே கட்சித் தலைவரின் பேச்சால் சர்ச்சை

post image

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி 2023ம் ஆண்டு இரண்டாக உடைந்தது. தற்போது துணை முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணி உருவாகி ஒட்டுமொத்த கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது.

தற்போது உத்தவ் தாக்கரே புதிய கட்சி மற்றும் புதிய சின்னத்துடன் அரசியல் செய்து வருகிறார். தாக்கரே உருவாக்கிய கட்சியும், சின்னமும் ஏக்நாத் ஷிண்டேயிடம் போய்விட்டது. தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தலைவர்கள் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயிக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் கடுமையான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருகின்றனர்.

ஏக்நாத் ஷிண்டே கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராம்தாஸ் கதம் பால்தாக்கரே மகன் உத்தவ் தாக்கரே மீது கடுமையான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி இருக்கிறார்.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இது தொடர்பாக அவர் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ''நான் கூட்டத்தில் பேசுவது அனைத்தும் உண்மை. உத்தவ் தாக்கரே எப்படிப்பட்டவர் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும். நான் உண்மையைப் பேசுகிறேனா என்பதைத் தெரிந்து கொள்ள எங்கள் இருவருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவேண்டும்.

பால்தாக்கரேயின் உயிலில் உள்ள விபரங்கள் குறித்து பிறகு விரிவாகச் சொல்கிறேன். ஆனால் உயில் எப்படித் தயாரிக்கப்பட்டது, யார் தயாரித்தார்கள், யார் அதில் கையெழுத்திட்டார்கள் என்பதையும் சொல்வேன்.

பால்தாக்கரே இறந்தவுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தாக்கரேயின் இல்லமான மாதோஸ்ரீ வந்தார். ஆனால் அவரை பால்தாக்கரே உடம்பைப் பார்க்க அனுமதிக்கவில்லை. பால்தாக்கரேயின் உடம்பு இருந்த மாடிப்பகுதிக்கு சரத்பவார் செல்ல அனுமதிக்கப்படவில்லை. நான் அப்போது அங்குதான் இருந்தேன்.

என்னிடம்தான் பால்தாக்கரே இறந்த செய்தியைச் சொல்லும்படி சொன்னார்கள். பால்தாக்கரே நமக்கெல்லாம் கடவுள் போன்றவர் என்பதால் அவரது காலடி ரேகையை எடுத்துக்கொள்ளலாம் என்று உத்தவ் தாக்கரேயிடம் சொன்னேன். அதற்கு அவரின் (பால்தாக்கரே) கைரேயை வைத்திருப்பதாக உத்தவ் தாக்கரே என்னிடம் சொன்னார்'' என்று தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

பால்தாக்கரேயின் கைரேகையை உத்தவ் தாக்கரே எடுத்திருப்பதாகத் தெரிவித்திருப்பதற்கு உத்தவ் தாக்கரே கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே கட்சி மூத்த தலைவர் சஞ்சய் ராவுத், ''பால்தாக்கரே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது முழுக்க முழுக்க நாங்கள் அவரது வீட்டில்தான் இருந்தோம். ராம்தாஸ் கதம் வாயில் யாரோ மாட்டுச்சாணத்தைப் போட்டு இருக்கிறார்கள். அது இப்போது வெளியில் வருகிறது'' என்று தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே கட்சியின் மற்றொரு தலைவர் பாஸ்கர் ஜாதவ் இது குறித்து கூறுகையில், ''எதாவது பொதுக்கூட்டத்தில் ராம்தாஸ் கதவைப் பேச அழைத்திருக்கிறார்களா? இது போன்று குரைக்கும் நாய்களுக்கு எந்த வித முக்கியத்துவமும் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை'' என்று தெரிவித்தார்.

இது குறித்து சரத்பவார் மகள் சுப்ரியா சுலே கூறுகையில், ''அரசியல் இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டது வருத்தமளிக்கிறது. இறந்து போன ஒருவரைப் பற்றியும், அவரது குடும்பத்தினரைப் பற்றியும் இது போன்று பேசுவது மனிதாபிமானமற்ற செயல்'' என்று தெரிவித்தார்.

நான்கு முறை கொங்கன் பகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்தாஸ் கதம் அமைச்சராகவும் இருந்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் தோற்றபோது சட்டமேலவை உறுப்பினராக மாற்றப்பட்டார்.

பால் தாக்கரே - உத்தவ் தாக்கரே
பால் தாக்கரே - உத்தவ் தாக்கரே

2012ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி பால்தாக்கரே தனது 86வது வயதில் காலமானார். அவரது உடல் இரண்டு நாள் வீட்டில் வைக்கப்பட்டு பின்னர் தாதர் சிவாஜிபார்க் மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் வரும் நாட்களில் இரு கட்சிகளும் மேலும் கடுமையான விமர்சனம் செய்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TVK : விஜய்யை வளைக்கப் பார்க்கிறதா பா.ஜ.க... டெல்லி பல்ஸ் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, "தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் விஜய் செல்லப் போகிறார்... அவரை கையில் எடுத்துவிட்டது பா.ஜ... மேலும் பார்க்க

சனே தகைச்சி: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் - பெண்ணியவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிக்காதது ஏன்?

ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார் 64 வயதாகும் சனே தகைச்சி. மேலும் அமைச்சரவையில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.ஜப்பான் சர்வதேச அளவில் பாலின ... மேலும் பார்க்க

கரந்தை: `நாங்களும் கொடுக்காத மனு இல்ல பாக்காத ஆள் இல்ல' சிதைந்த படித்துறையை சீரமைக்க கோரும் மக்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில் உள்ள வடவாறு படித்துறை கடந்த எட்டு வருடமாக சிதைந்து கிடக்கிறது. அதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்... மேலும் பார்க்க

உங்களது வாகனத்தில் ஃபாஸ்ட் டேக் இல்லையா? பிரச்னையே இல்லை; மத்திய அரசு அறிவித்த புதிய நடைமுறை

பணமாக அல்லாமல், டிஜிட்டல் முறையில் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும் என்று தான் ஃபாஸ்ட் டேக் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை 2021-ம் ஆண்டு முதல், தேசிய நெடுஞ்சாலைகளில் பய... மேலும் பார்க்க

இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்? ஒப்புக்கொண்ட ஹமாஸ்; இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவு என்ன?

கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்தத்திற்காக 20 பரிந்துரைகளைப் பரிந்துரைத்திருந்தார். ஹமாஸின் ஒப்புதல் ஐ.நா பொதுசபைக்காக, அப்போது அமெரிக்கா சென்... மேலும் பார்க்க