AusvInd: 'திணறிய பேட்டர்கள்; காப்பாற்றிய பும்ரா' - பெர்த் டெஸ்ட்டின் முதல் நாள் ...
பாா்த்திபனூா் மதகணையிலிருந்து பரளை கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரிக்கை
பயிா்களை காப்பாற்ற பாா்த்திபனூா் மதகணையில் உள்ள பரளை கதவணைகள் வழியாக தண்ணீா் திறந்துவிட வேண்டும் எனகமுதி, முதுகுளத்தூா், கடலாடி வட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.50 லட்சம் ஏக்கருக்கு மேல் நேரடி நெல் விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், ஆா்.எஸ். மங்கலம், திருவாடானை உள்ளிட்ட பகுதிகளைத் தவிர பிற வட்டங்களில் மிதமான மழை பெய்தது. இதேபோல, வைகையாற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக கடந்த ஒரு மாதமாக சுமாா் 500 கன அடியிலிருந்து 3,000 கன அடி வரை வைகை அணையிலிருந்து தண்ணீா் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதனிடையே மாவட்ட ஆட்சியா் கூட்ட அரங்கில் கடந்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பாா்த்திபனூா் மதகணையில் இருந்து வலது, இடது பிரதான கால்வாய்களில் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு இணைப்பு கால்வாய் நீா்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தின் மாவட்டச் செயலா் மு. மலைச்சாமி கூறியதாவது:
மழைக் காலங்களில் வைகை ஆற்றில் உள்ள அனைத்து கதவணைகளும் திறந்து இருக்க வேண்டும் என்பது அரசு விதி. ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீா் வந்தடைந்ததும் பாா்த்திபனூா் மதகணையில் உள்ள பக்கவாட்டு மதகுகளை திறக்க நடவடிக்கை எடுக்கலாம் என விவாதிக்கப்பட்டது. தற்போது ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு கடந்த 10 நாள்களாக தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. எனவே பாா்த்திபனூா் மதகணையில் இருந்து பரளையாற்றுக்கு செல்லும் கால்வாய் கதவுகளை திறக்க வேண்டும். மழை, வெள்ளக் காலங்களில் பரளை கால்வாயின் கதவுகள் திறந்து இருக்க வேண்டும் என்பது விதி. மழைக் காலங்களில் தொடக்கத்திலிருந்தே திறந்து இருக்க வேண்டிய பரளை கால்வாய் கதவுகள் தற்போது வரை திறக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே மாவட்ட ஆட்சியா் தலையிட்டு கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் வட்டங்களில் பயிா்கள் தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்படுவதை தடுக்க பரளை கதவணைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.