பிச்சைக் கொடுத்தால் வழக்கு!
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிச்சைக்காரர்களுக்கு பிச்சைக் கொடுப்பவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என அம்மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இந்தியாவின் சுத்தமான நகரங்களில் ஒன்றான இந்தூரில், தற்போது பிச்சைக்காரர்கள் அற்ற நகரமாக மாற்ற வேண்டும் எனும் முயற்சியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பிச்சை எடுப்பதற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அடுத்தாண்டு (2025) ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிச்சை எடுப்பது மற்றும் கொடுப்பது ஆகிய இரண்டும் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா எனப்படும் சட்டத்தின் 163 ஆம் பிரிவின் அடிப்படையில் இந்தூர் மாவட்டத்தில் தடை செய்யப்படவுள்ளது.
இந்தச் சட்டத்தை மீறுபவர்களின் மீது வழக்கு செய்யப்படும் எனவும் அவர்களுக்கு ரூ.1000 அபராதம் மற்றும் 6 மாதக் கால சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: புஷ்பா-2 நெரிசலில் சிக்கிய சிறுவனின் உடல்நிலை பற்றிய அதிர்ச்சித் தகவல்!
இதுகுறித்து இந்தூர் மாவட்ட ஆட்சியர் அஷிஷ் சிங் கூறுகையில், டிசம்பர் மாதம் இறுதி வரையில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும் எனவும், அம்மாவட்ட குடியிருப்புவாசிகள் யாரும் பிச்சைக்கொடுத்து அப்பாவத்தில் பங்கெடுக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதி முதல் யாரேனும் பிச்சைக்கொடுத்தால் அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மத்திய அரசின் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மேம்படுத்த உருவாக்கப்பட்ட திட்டமான ஸ்மைலின் (SMILE) உதவியோடு இந்தூர் உள்பட இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களையும் பிச்சைக்காரர்கள் அற்ற நகரமாக மாற்றும் முயற்சியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு, சமூகத்தின் பொருளாதார பிரச்னைகளினாலும், சரியான கல்வி கிடைக்காமல் போனதாலும் வேலையின்மை ஆகியவற்றினால் மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக கூறி உச்சநீதிமன்றம் பிச்சை எடுப்பதை தடைச் செய்ய மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.