பிப்.20-க்கு பிறகு போக்குவரத்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை
பிப். 20-ஆம் தேதிக்குப் பின்னா் எந்த நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கும் என அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலா் ஆா்.கமலகண்ணன் தெரிவித்தாா்.
சென்னையில் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையின் கீழ் செயல்படும் கூட்டமைப்புச் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தேமுதிக, புரட்சி பாரதம் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட 22 சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா். பின்னா் செய்தியாளா்களிடம் ஆா்.கமலகண்ணன் கூறியதாவது:
போக்குவரத்துத் துறையிலுள்ள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப். 5-ஆம் தேதி போக்குவரத்துச் செயலரை சந்தித்து வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கவுள்ளோம். இதையடுத்து, பிப். 20 முதல் எந்த நேரத்திலும் வேலைநிறுத்தம் நடைபெறும். தொமுச-வை தவிா்த்து அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். அதிமுக ஆட்சியில் 3 ஆண்டு காலமாக இருந்த ஊதிய ஒப்பந்த காலம் 4 ஆண்டுகள் ஆக்கப்பட்டு, தற்போது 6-ஆம் ஆண்டைக் கடந்தும் பேச்சுவாா்த்தை நடத்தப்படாமலேயே இருந்து வருகிறது.
ஓய்வூதியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு, பணப்பலன் வழங்கப்படவில்லை. ஆகவே, அனைத்துச் சங்கங்களையும் இணைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்றாா் அவா்.