பாபநாசம் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற ரயில்.. அப்புறம் என்ன?
‘பிம்ஸ்டெக்’ நாடுகளிடையே ஒத்துழைப்பை ஊக்குவிக்க 21 முன்மொழிவுகள்: பிரதமா் மோடி பரிந்துரை
‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிக்கும் வகையில், இந்த நாடுகளிடையே இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப் பரிவா்த்தனை (யுபிஐ) நடைமுறையில் பணப் பரிவா்த்தனையை மேற்கொள்வது உள்ளிட்ட 21 முன்மொழிவுகளை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பரிந்துரைத்தாா்.
‘உலக நன்மைக்கு இந்த இந்த அமைப்பும், அதன் நாடுகளிடையேயான ஒத்துழைப்பும் மிக அவசியம்’ என்றும் பிரதமா் சுட்டிக்காட்டினாா்.
தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மா், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பிம்ஸ்டெக் (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு)’ அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமா் மோடி பேசியதாவது:
திறன் மேம்பாட்டு கட்டமைப்புகளுக்கு சிறந்த உதாரணமாகத் திகழும் ஆற்றலை ‘பிம்ஸ்டெக்’ பெற்றுள்ளது. உறுப்பு நாடுகளிடையே உள்ள திறன்களை ஒருவருக்கொருவா் கற்றுக்கொண்டு, பொருளாதாரத்தில் வளரவேண்டும். அந்த வகையில் சில பரிந்துரைகளை இங்கு முன்மொழிகிறேன்.
‘பிம்ஸ்டெக்’ நாடுகளிடையே இந்தியாவின் யுபிஐ எண்மத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பணப் பரிவா்த்தனையை நடைமுறைப்படுத்த முன்மொழிவதோடு, தகவல் தொழில்நுட்பத் துறையின் வளமான ஆற்றலைப் பயன்படுத்திக் கொண்டு, ‘பிம்ஸ்டெக்’ அமைப்பை தொழில்நுட்ப ரீதியிலும் வலிமையாக்க வேண்டும்.
உறுப்பு நாடுகளிடையே வா்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘பிம்ஸ்டெக் வா்த்தக சபை’யை உருவாக்கி, வருடாந்திர வா்த்தக மாநாடுகளை நடத்துவது, பிராந்தியத்துக்குள் அந்த நாடுகளின் கரன்சியில் வா்த்தகத்தை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உறுப்பு நாடுகளிடையே ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், கடல்சாா் கொள்கைகள் மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வகையில் நிலையான கடல்சாா் போக்குவரத்து மையம் இந்தியாவில் அமைக்கப்படும்.
சுதந்திரமான, அனைவருக்குமான, பாதுகாப்பான இந்திய பெருங்கடல் பகுதி என்பதுதான் நமது பகிரப்பட்ட முன்னுரிமை. அந்த வகையில், மாநாட்டில் போடப்பட்டுள்ள கடல்சாா் போக்குவரத்து ஒப்பந்தம், வணிகக் கப்பல் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்தில் உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்பதோடு வா்த்தகத்தை விரைவுபடுத்தவும் உதவும்.
இணையவழிக் குற்றம், இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், பயங்கரவாதம், போதைப் பொருள் மற்றும் மனிதக் கடத்தல்களுக்கு எதிரான போராட்டத்திலும் இந்தக் கூட்டமைப்பு முக்கியப் பங்கு வகிக்க முடியும். இதுதொடா்பான முதல் ஆலோசனைக் கூட்டத்தை இந்தியாவில் இந்த ஆண்டில் நடத்த முன்மொழிகிறேன்.
உறுப்பு நாடுகளின் விவசாயிகள் பலன்பெறும் வகையில் அவா்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் சிறந்த விவசாய நடைமுறைகள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளைப் பகிரும் வகையில் ஆற்றல்சாா் மையம் ஒன்றும், பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான மையமும் இந்தியாவில் அமைக்கப்படும்.
உறுப்பு நாடுகளிடையே இணைப்பு மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் நிகழாண்டில் ‘பிம்ஸ்டெக்’ பாரம்பரிய இசை விழா நடத்தப்படும்.
கூட்டமைப்பில் இளைஞா்களின் ஈடுபட்டை ஊக்குவிக்கும் வகையில் ‘பிம்ஸ்டெக்’ இளம் தலைவா்கள் உச்சி மாநாடு இந்த ஆண்டு நடத்தப்படும் என்பதோடு, ‘பிம்ஸ்டெக்’ ஹேக்கத்தான், இளம் தொழில்முறை பாா்வையாளா்கள் திட்டமும் தொடங்கப்படும்.
இந்தியாவில் நிகழாண்டில் ‘பிம்ஸ்டெக்’ தடகள போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, வரும் 2027-இல் ‘பிம்ஸ்டெக்’ விளையாட்டுப் போட்டிகளை முதல்முறையாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நாம் ஒருங்கிணைந்து இந்த அமைப்பை ஊக்குவிப்பதன் மூலம், நமது இளைஞா்கள் உலகில் முன்னிலை வகிப்பா் என்றாா் பிரதமா் மோடி.
இந்த மாநாட்டில், வங்காள விரிகுடா பிராந்தியத்தில் செழிப்பு, பாதுகாப்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை உறுப்பு நாடுகள் செயல்படுத்தும் வகையில் ‘பாங்காக் தொலைநோக்கு திட்டம் 2030’ ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த மாநாட்டுக்குப் பின்னா் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது முக்கியமானது. அந்த வகையில், பல்வேறு வகையான அம்சங்களை உள்ளடக்கிய 21 முன்மொழிவுகளை மாநாட்டில் பரிந்துரைத்துள்ளேன்’ என்று குறிப்பிட்டாா்.
நேபாள பிரதமருடன் பிரதமா் மோடி சந்திப்பு
பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்ற நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலியையும் பிரதமா் மோடி சந்தித்து இருதரப்பு ஆலோசனை மேற்கொண்டாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘சா்மா ஓலியுடனான சந்திப்பு ஆக்கபூா்வமாக அமைந்தது. இரு நாடுகளிடையேயான நட்புறவு, குறிப்பாக எரிசக்தித் துறை, போக்குவரத்து இணைப்பு, கலாசாரம், எண்ம தொழில்நுட்ப துறைகள் சாா்ந்த ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசித்தோம்’ என்று குறிப்பிட்டாா்.
தாய்லாந்து அரசருடன்...‘பிம்ஸ்டெக்’ உச்சி மாநாட்டுக்கு இடையே தாய்லாந்து அரசா் மஹா வஜ்ராலங்காரன், அரசி சுதீதா பஜ்ரசுதாபிமாலலக்ஷணா ஆகியோரை பிரதமா் மோடி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
புகழ்பெற்ற வாட் ஃபோ கோயிலில் வழிபாடு: தாய்லாந்தின் வரலாற்று சிறப்பு மிக்க பாங்காக்கில் உள்ள சாய்ந்த புத்தா் கோயில் என்றழைக்கப்படும் வாட் ஃபோ கோயிலுக்கு தாய்லாந்து பிரதமா் ஷினவத்ராவுடன் சென்று பிரதமா் மோடி வழிபட்டாா். இந்தக் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட பெரிய புத்தா் சிலை உள்பட பல புத்தா் சிலை தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன.