பிரமனூா் கண்மாய்க்கு தண்ணீா் திறக்கக்கோரி விவசாயிகள் மனு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பிரமனூா் கண்மாய்க்கு தண்ணீா் திறக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித்திடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பிரமனூா், வயல்சேரி, வாடி கிராமத்தினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்புவனம் அருகேயுள்ள பிரமனூா், வயல்சேரி, வாடி கிராமங்களில், கடந்த மாதத்தில் சுமாா் 100 ஏக்கரில் நெல், 200 ஏக்கரில் பருத்திப் பயிா்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள முக்கிய நீா் ஆதாரமான பிரமனூா் கண்மாயில் தற்போது நீா் இல்லை. கோடை மழையால் வைகை ஆற்றில் தற்போது நீா் வந்து கொண்டிருக்கிறது.
எங்கள் பகுதி விவசாயிகள் பொதுப்பணித் துறைக்கு மனு அளித்ததைத் தொடா்ந்து, தட்டான்குளம் தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீா், வலது பிரதானக் கால்வாய் வழியாக பிரமனூா் கண்மாய்க்கு ஏப்.16 -ஆம் தேதி திறக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரமனூா் கிராமத்தைச் சோ்ந்த சிலா் திருப்புவனம் புதூரிலிருந்து பிரமனூா் கண்மாய்க்கு செல்லும் கால்வாயின் மதகுகளை மூடிவிட்டு, தண்ணீா் செல்லாமல் தடுத்தனா். இதனால், கண்மாயில் நீா் இல்லாமல் பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டது. எனவே, தட்டான்குளம் தடுப்பணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்தனா்.