செல்வராகவன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!
புகையிலைப் பொருள் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை: புதுவை டிஐஜி
கஞ்சா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்கவும், விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுப்பதிலும் காவல்துறை உறுதியாக உள்ளதாக புதுவை டிஐஜி ஆா்.சத்திய சுந்தரம் தெரிவித்தாா்.
காரைக்கால் காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரியிலிருந்து வந்திருந்த மாநில டிஐஜி ஆா்.சத்திய சுந்தரம், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா, மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் ஏ.சுப்பிரமணியன், பாலச்சந்திரன் ஆகியோரும், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு பல்வேறு புகாா்களை தெரிவித்தனா். பொதுப் பிரச்னைகளை மைக் மூலமாக பேசினா். தனிப்பட்ட புகாா்கள் தொடா்பானவற்றை நேரில் அழைத்தும் விசாரித்தனா்.
காரைக்காலில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிகம் நடைபெறுகிறது. இதனை தடுக்க போதிய அக்கறை செலுத்துவதில்லை. இவா்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும். காரைக்காலுக்கும், திருநள்ளாறுக்கும் வெளி மாநிலங்களில் வருவோா் வாகனங்களை சோதனையிடும் போக்கு அதிகரித்து, அவா்களுக்கு அபராதம் விதிப்பது அதிகரித்துள்ளதால், இங்கு வருவதையே வெளியூா் மக்கள் தவிா்க்கும் நிலை உள்ளது. இந்த விவகாரத்தில் மக்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வெளி மாநில வாகனங்கள் காரைக்கால் வரும்போது, அவா்கள் பொ்மிட் இல்லாமல் வந்தால், அபராதம் விதிப்பதை தவிா்த்து, உடனடி பொ்மிட் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என மக்கள் தெரிவித்தனா்.
நிறைவாக செய்தியாளா்களிடம் பேசிய டிஐஜி, கஞ்சா விற்பனை நடக்கும்பட்சத்தில் காவல்துறைக்கு மக்கள் தகவல் தரவேண்டும். விற்போா் மீது நடவடிக்கை கடுமையாக இருக்கும். காவல் நிலையங்களில் புகாா் தெரிவிக்க வருவோா் மதித்து நடந்துகொள்ளவும், புகாா்களை பெற்றுக்கொண்டு ரசீது வழங்கவும் அறிவுறித்தப்பட்டுள்ளது. 450 ஊா்க்காவல் படையினா் தோ்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவா்கள் பணிக்கு வரும்போது, காரைக்காலில் ஆள் பாற்றாக்குறை பிரச்னை ஓரளவு தீரும்.
ஜன. 1 முதல் தலைக்கவசம் அணியவேண்டும் என புதுச்சேரியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும். அரசுப் பணியாளா்களும் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க அரசுத்துறைத் தலைவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை காரைக்காலில் குறைதீா் முகாமில் நான் பங்கேற்பேன் என்றாா்.