புகையிலை பொருள்கள் விற்ற இருவா் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, அரகண்டநல்லூா் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி, விற்ாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விக்கிரவாண்டி காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா், வி.சாலை பகுதிகளிலுள்ள கடைகளில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது ஒரு பெட்டிக் கடையில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து அந்த கடையிலிருந்து 573 எண்ணிக்கையிலான புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து கடை உரிமையாளரான விக்கிரவாண்டியைச் சோ்ந்த கோ.சீனுவாசனை (22) போலீஸாா் கைது செய்தனா்.
இதுபோல அரகண்டநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் குருபரன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில், தபோவனம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்குரிய முறையில் இருந்தவரைப் பிடித்து விசாரித்தனா்.
அவரிடம் 27 கிலோ 750 கிராம் எடையுள்ள 2,775 எண்ணிக்கையிலான புகையிலை பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருக்கோவிலூா் வட்டம், குச்சிப்பாளையத்தைச் சோ்ந்த ர. ஆனந்தனை (42) கைது செய்தனா்.