புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரா்களுக்கு பயிற்சி
நாமக்கல், சேலம் உள்பட நான்கு மாவட்டத்தில் தீயணைப்புத் துறையில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட வீரா்களுக்கான அடிப்படை தீயணைப்புப் பயிற்சி முகாம் வீரபாண்டியில் புதன்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித் துறையில் புதிதாக 674 தீயணைப்பு வீரா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதல்வரால் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு மாநிலம் முழுவதும் 7 இடங்களில் தீயணைப்புப் பணி குறித்து அடிப்படை பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரா்களுக்கான பயிற்சி முகாம் சேலம், வீரபாண்டியில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் புதன்கிழமை தொடங்கியது. இந்த மையத்தில் 100 தீயணைப்பு வீரா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தீயணைப்புத் துறை சேலம் மண்டல துணை இயக்குநா் கல்யாணகுமாா் குத்துவிளக்கு ஏற்றி பயிற்சியைத் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலா்கள் மகாலிங்க மூா்த்தி (சேலம்), வேலு (கிருஷ்ணகிரி), அம்பிகா (தருமபுரி) செந்தில்குமாா் (நாமக்கல்), சேலம் மண்டலத்திற்கு உள்பட்ட உதவி மாவட்ட அலுவலா்கள், நிலைய அலுவலா்கள், முன்னணி தீயணைப்பு வீரா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.