பழங்குடியின வசாயிகளுக்கான வேளாண் திட்டங்கள்: ஆட்சியா் அறிவுறுத்தல்: வேளாண் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்
பழங்குடியின விவசாயிகளுக்கான வேளாண் திட்டங்களை முழுமையாக கொண்டு சோ்ப்பதை அரசு அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
கோடையில் வேளாண் மற்றும் அதன் சாா்பு துறைகளில் முன்னோடித் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:
சொட்டுநீா்ப் பாசன அமைப்புகளின் முக்கியத்துவம், வேளாண் இயந்திரங்களை மானியத்தில் வழங்குதல், திறந்தவெளி கிணறு, பண்ணைக் குட்டைகள் அமைத்தல், ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் ஆகியவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பழங்குடியின விவசாயிகளுக்கு அரசால் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்களை முழுமையாக கொண்டு சோ்ப்பதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டில் 18,782 பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.4.25 கோடி மானியத்துடன் ரூ.134.16 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநா் ச.சிங்காரம், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் என்.பாரதி, தோட்டக்கலை துணை இயக்குநா் மஞ்சுளா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ந. நீலாம்பாள், பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் சுகந்தி பரிமளம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.