'கூட்டணி கணக்கு; முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை தரப்பு' - அனல் தகிக்கும் கமலாலயம்
புதுக்கோட்டை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்? - நீதிபதி தலைமையில் விசாரணை!
புதுக்கோட்டை, பெரியார் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இளைஞர்கள் ஒன்றாக இருந்து கொண்டு போதை ஊசி பயன்படுத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அங்கு சென்ற தனிப்படை போலீஸார், அங்கிருந்த 13 இளைஞர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர். தொடர் விசாரணைக்காகவும், போதைப் பொருட்களைக் கைப்பற்றும் வகையிலும் அவர்களை போலீஸார் வாகனத்தில் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. அப்போது, சாந்தநாதபுரம் 7-ஆம் வீதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் விக்னேஸ்வரன்(வயது: 36) என்பவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், விக்னேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த நிலையில், போதை ஊசி பயன்படுத்திய இதர 12 பேரையும் விசாரணைக்குப் பிறகு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இறந்த விக்னேஸ்வரனின் உடல், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று உடற்கூறாய்வுக்குப் பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்நிலையில், லாக்கப் மரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியதால், அந்த இளைஞர் இறந்ததை காவல் நிலைய மரணமாக வழக்குப்பதிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மற்றவர்களில் ஒருவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், காவல்துறை தரப்பில், 'விக்னேஷூக்கு ஏற்கனவே மஞ்சள்காமாலை பிரச்னை இருந்துள்ளது. அதனால், காவல் நிலைத்துக்கு அழைத்துச் செல்லும்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டு, அவர் இறந்தார்' என்று விளக்கம் கொடுத்துள்ளனர். அதோடு, புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்திருப்பது, புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.