சட்டவிரோதமாக குடியேறிய 900 வங்கதேசத்தினர்! விரைவில் நாடுகடத்தல்!
புதுச்சேரி, உழவா்கரை நகராட்சிகளில் துப்புரவுப் பணியில் 15 ரோபோடிக் இயந்திரங்கள்
புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி துப்புரவுப் பணியில் விரைவில் 15 ரோபோடிக் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தெரிவித்தாா்.
மத்திய அரசின் நமஸ்தே திட்டத்தின் கீழ், உழவா்கரை நகராட்சி மற்றும் ஜென் ரோபோடிக் இன்னோவேஷன்ஸ் நிறுவனம் சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி பட்டறை திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி காமராஜா் மணிமண்டபத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி பட்டறையை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், அமைச்சா் க. லட்சுமிநாராயணன் பேசியது: மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை முழுமையாக நிறுத்தும் வகையில் தூய்மைப் பணியில் நவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது கடமையாகும்.
அதன்படி, புதுச்சேரியில் புதை சாக்கடை அடைப்புகளை நவீன இயந்திரங்கள் மூலம் அகற்ற முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, தேசிய தூய்மைப் பணியாளா்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து ரூ.5.50 கோடியில் 6 ரோபோட் துப்புரவு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
மேலும், 9 ரோபோடிக் இயந்திரங்கள் வாங்கப்படவுள்ளன. இவை புதுச்சேரி நகராட்சிப் பகுதிகளில் புதை சாக்கடை அடைப்புகளில் ஏற்படும் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணப்படும்.
புதுவை மாநிலம், தற்போது 63 சதவீதம் நகரமயமாகி விட்டது. இதனால், கழிவுகளை அகற்றுவது சவாலாக உள்ளது. எனவே, புதிய தொழில்நுட்பம் மூலம் வேகமாகவும், எளிமையாகவும் புதை சாக்கடையில் உள்ள அடைப்புகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
இதற்காக ரோபோடிக் இயந்திரங்கள் வாங்கப்படுகின்றன. இவை துப்புரவுத் தொழிலாளா்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகும் என்றாா்.