மாட்டுப் பொங்கல்: பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
புதுச்சேரி: பொங்கலுக்கு வந்த மருமகன்… 470 வகை உணவுடன் `பாகுபலி’ விருந்து வைத்த மாமியார்!
தங்கள் மகளை திருமணம் செய்து கொண்ட மருமகனை, தீபாவளி மற்றும் பொங்கலுக்கு மாமியார் வீட்டிற்கு அழைத்து தலை தீபாவளி, தலை பொங்கலுக்கு விருந்து வைப்பது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கமாக இருக்கிறது. தமிழகத்தில் தலை தீபாவளிக்கு சீர் வரிசை செய்து, தடபுடலாக விருந்து வைத்து விசேஷமாக கொண்டாடுவார்கள். அதன்படி புதுச்சேரி பிராந்தியங்களில் ஒன்றான ஏனாமில் சங்கராந்திக்கு (பொங்கல் திருவிழா), மருமகனை அழைத்து தடபுடலாக விருந்து வைப்பது வழக்கத்தில் இருக்கிறது.
பெண் வீட்டாரின் பொருளாதார வசதிகளுக்கேற்ப விருந்தின் தன்மை வேறுபடும். ஏனாம் சத்யபாஸ்கர் வெங்கடேசன், ராஜலட்சுமி தம்பதியின் இரண்டாவது மகள் ஹரின்யா. மருத்துவரான இவருக்கும், விஜயவாடாவைச் சேர்ந்த ஷாகேத் என்பவருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அமெரிக்காவில் மென்பொருள் பணியாளராகப் பணியாற்றிய ஷாகேத், தற்போது விஜயவாடாவில் ஸ்டீல் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.
ஷாகேத் மற்றும் ஹரின்யாவுக்கு இது தலைப் பொங்கல் என்பதால், மாமியார் வீட்டில் இருவருக்கும் விருந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மகளுடன் வீட்டிற்கு வந்த மருமகனுக்கு, 470 வகையான உணவுகளுடன் விருந்து வைத்து அசத்தினார் மாமியார் ராஜலட்சுமி. அதையடுத்து புதுமணத் தம்பதிக்கு தன் கையாலேயே ஊட்டிவிட்டார் ராஜலட்சுமி. இது குறித்துக் கூறும் ராஜலட்சுமி, ``எங்கள் வீட்டுக்காரருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். நாங்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாகவே வசிக்கிறோம்.
எங்கள் மொத்த குடும்பத்திற்கும் ஹரின்யாவையும் சேர்த்து இரண்டு மகள்கள். மூத்த மகள் ஆஸ்திரேலியாவில் இருக்கிறாள். இதை பாகுபலி விருந்து என்று கூறுவோம். நாங்கள் குடும்பமாக இணைந்து, எங்கள் மருமகனுக்கு பொங்கல் விருந்து கொடுத்திருக்கிறோம். அதற்காக எங்கள் மருமகனுக்குப் பிடித்த இனிப்பு, காரம் மற்றும் உணவு வகைகளை செய்திருக்கிறோம். மேலும் 20-க்கும் மேற்பட்ட மாநில உணவுகளையும் செய்தோம்” என்று நெகிழ்கிறார்.