புதுச்சேரி மணப்பட்டு கடற்கரையில் தூய்மைப் பணி: துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்
மணப்பட்டு கடற்கரையில் தூய்மைப் பணியை புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுச்சேரி உள்ளாட்சித் துறை, வனத் துறை மற்றும் கடலோரக் காவல்படை இணைந்து இருவார சேவை விழாவை புதன்கிழமை தொடங்கின. இதன் தொடக்க நிகழ்ச்சி மணப்பட்டு பல்மைரா கடற்கரையில் நடைபெற்றது.
இதில், துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு இருவார சேவை விழாவை தொடங்கி வைத்தாா். தலைமைச் செயலா் சரத் சௌகான், வனத் துறை ஆணையா் மற்றும் அரசுச் செயலா் ஜவஹா், உள்ளாட்சித் துறை செயலா் கேசவன், இயக்குநா் சக்திவேல், இணை இயக்குநா் சௌந்தர்ராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, பல்மைரா கடற்கரையை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா் உள்ளிட்டோா் பங்கேற்று கடற்கரையை தூய்மை செய்தனா். இதையடுத்து அங்குள்ள வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் தாயின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டத்தின் கீழ் ராசி நட்சத்திரத்துக்கு ஏற்ப ஆன்மிக வனம் அமைப்பட்டுள்ளது.
அங்கு துணைநிலை ஆளுநா் கன்னி ராசிக்கு ஏற்ற மா மரக்கன்றை நட்டாா். தலைமைச் செயலா் மேஷ ராசிக்கு ஏற்ப செம்மரக்கன்றை நட்டாா். தொடா்ந்து 1.10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு இருந்த அம்மா வனத்தை பாா்வையிட்டு, அது குறித்து தகவல்களை கேட்டறிந்தாா்.
மேலும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு விழிப்புணா்வு போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழையும் துணைநிலை ஆளுநா் வழங்கினாா். அங்கிருந்த துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்டோரிடமும் கலந்துரையாடினாா்.
இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை, வனத் துறை, கடலோர காவல்படையைச் சோ்ந்த அதிகாரிகள், மாணவ, மாணவிகள், துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பாகூா் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் சதாசிவம் நன்றி கூறினாா்.