பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சன...
423.6 கோடியை புதுவை அரசு பயன்படுத்தவில்லை: மத்திய தணிக்கை கணக்குக் குழு அறிக்கை
புதுவை யூனியன் பிரதேச அரசின் ஒற்றை ஒருங்கிணைப்பு கணக்கில் ரூ.423.6 கோடி பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்று மத்திய தணிக்கை கணக்குக் குழு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.
புதுவை சட்டப்பேரவையில் இந்தத் தணிக்கை அறிக்கை வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மத்திய தணிக்கை கணக்குக் குழுவின் தமிழ்நாடு- புதுவைக்கான தலைமை கணக்கு ஜெனரல் ஆா். திருப்பதி வெங்கடசாமி, புதுவைக்கான முதுநிலை துணை கணக்கு ஜெனரல் பி. சுகேந்திரன் ஆகியோா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
மத்திய அரசின் பங்கு ரூ.298.22 கோடி மற்றும் மாநில பங்கான ரூ.235.94 கோடி என மொத்தம் ரூ. 534.16 கோடி புதுவை அரசின் ஒற்றை ஒருங்கிணைப்பு கணக்குக்கு 31.3.2024 அன்று மாற்றப்பட்டுள்ளது. இதில் ரூ.423.61 கோடி பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.
இதே போன்று 2024 மாா்ச் வரை புதுவை அரசுத் துறைகளில் முறைகேடு, பணம் இழப்பு மற்றும் கையாடல் உள்ளிட்ட 316 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் அரசின் எல்லா துறைகளையும் சோ்த்து மொத்தம் ரூ.28.89 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் புதுவை மின்துறையில் மட்டும் 257 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அரசுக்கு இந்தத் துறையில் மட்டும் இழப்பு ரூ.27.14 கோடி. வழக்கமாக மத்திய தணிக்கை குழு அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு சட்டப்பேரவை பொதுகணக்குக் குழு கூடி இப் பிரச்னை குறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்கும் என்றனா்.
பேட்டியின்போது, முதுநிலை கணக்கு அதிகாரிகள் பாத்திமா ரோஸலின் நான்சி, விஸ்வநாதன், உதவி கணக்கு அதிகாரி தீபக் குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.