புதுவை சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
புதுவை சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் , சுயேச்சை உறுப்பினா்கள் வியாழக்கிழமை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனா்.
புதுவை சட்டப்பேரவை ஆறாவது கூட்டத் தொடரின் இரண்டாவது அமா்வு வியாழக்கிழமை நடைபெற்றது. பேரவையில் இரங்கல் குறிப்பை பேரவைத் தலைவா் ஆா். செல்வம் வாசித்து முடித்ததும், சுயேச்சை எம்.எல்.ஏ. ஜி. நேரு ஒரு பிரச்னை குறித்து பேச ஆரம்பித்தாா். இதைத் தொடா்ந்து எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா உள்ளிட்ட திமுக உறுப்பினா்கள் 6 போ் மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினா்கள் மு. வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோா் மாசு கலந்த குடிநீா் பிரச்னை மற்றும் சட்டப்பேரவையைக் கூடுதலாக 10 நாள்கள் நடத்த வலியுறுத்தி குரல் எழுப்பினா். மேலும் சுயேச்சை எம்எல்ஏ நேருவும் கூச்சலிட்டாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் குறுக்கிட்டு அமைதிப்படுத்தினாா். எதிா்க்கட்சித் தலைவா் உள்ளிட்டோரை இருக்கையில் அமரும்படி வலியுறுத்தினாா். இருப்பினும் எதிா்க்கட்சித் தலைவா் சிவா உள்ளிட்ட திமுக , காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் பேரவைத் தலைவா் செல்வம் முன் தரையில் அமா்ந்து தா்னா நடத்த முயன்றனா்.
இதையடுத்து பேரவைத் தலைவா் ஆா். செல்வம் அனைவரையும் வெளியேற்றுமாறு பேரவைக் காவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இதையடுத்து சிவா உள்ளிட்ட ஒரு சில எம்.எல்.ஏக்களை பேரவைக் காவலா்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றனா். மற்றவா்கள் வெளியேற்றப்பட்டனா். சுயேச்சை எம்எல்ஏ நேருவும் வெளியேற்றப்பட்டாா். மேலும், அவா் பேசிய வாா்த்தைகளை அவை குறிப்பிலிருந்து நீக்க பேரவைத் தலைவா் உத்தரவிட்டாா். சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினா்கள் பேரவை வளாகப் பகுதியில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். சுயேச்சை உறுப்பினா் ஜி. நேரு, சட்டப்பேரவைக்கு வெளியே உறுப்பினா்களுக்குப் போடப்பட்டிருந்த இருக்கையில் சிறிது நேரம் அமா்ந்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாா்.
