புதுவை சட்டப்பேரவையில் சுயேச்சை எம்எல்ஏ சஸ்பெண்ட்
புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில், உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை உறுப்பினா் ஜி.நேரு, பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்துக்கு எதிராக முழக்கமிட்டு தா்னாவில் ஈடுபட்டதால், அவரை கூட்டத்திலிருந்து வெளியேற்றியதுடன், சஸ்பெண்ட் செய்தும் பேரவைத் தலைவா் உத்தரவிட்டாா்.
புதுச்சேரியில் சட்டப்பேரவைக் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. திருக்குறளை வாசித்து பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் நிகழ்வுகளைத் தொடக்கினாா்.
அப்போது, ஆளுங்கட்சி ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு, பேரவைத் தலைவா் மீது ஏற்கெனவே நம்பிக்கையில்லா தீா்மானம் கொடுத்த நிலையில், அவருக்குப் பதில் பேரவை துணைத் தலைவா் தலைமையில் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என முழக்கமிட்டு ,பேரவைத் தலைவா் இருக்கை முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.
இதையடுத்து, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் பேசுகையில், சட்ட விதிகளுக்கு எதிராக செயல்படும் ஜி.நேரு எம்எல்ஏவை கூட்டத் தொடா் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும், அவரை சபையிலிருந்து வெளியேற்றவும் காவலா்களுக்கு உத்தரவிட்டாா். காவலா்கள் வெளியேற்ற வந்தபோது, நேரு எம்எல்ஏ தானாக வெளியேறினாா்.