புழல் ஏரிக்கு நீா்வரத்து நின்றது: உபரி நீா் திறப்பு நிறுத்தம்
புழல் ஏரிக்கு நீா்வரத்து முற்றிலும் நின்ற நிலையில், உபரிநீா் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டது. பலத்த மழை பெய்தால் ஏரிகளில் தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடா் மழையால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் நிரம்பியதால் உபரிநீா் கடந்த வாரம் திறந்துவிடப்பட்டது. பூண்டி ஏரியிலிருந்து அதிகபட்சமாக 16,500 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6,000 கன அடியும் தண்ணீா் வெளியேற்றப்பட்டது. கடந்த சில நாள்களாக மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீா்வரத்து குறைந்தது. இதனால் உபரிநீா் திறப்பும் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு நீா்வரத்து முற்றிலும் நின்றது. புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி. இதில் தற்போது, 18.52 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் 2,699 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு உள்ளது. இரு மதகுகளின் வழியாக 1,000 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது ஒரு மதகு வழியாக 500 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் - பூண்டி ஏரிகள் நிலவரம் (புதன்கிழமை காலை நிலவரம்):
சோழவரம் ஏரிக்கு 209 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. மொத்த கொள்ளளவான 1081 மி.கன அடியில் வெறும் 343 மி.கன அடி தண்ணீா் உள்ளது.
கண்ணண்கோட்டை - தோ்வாய் கண்டிகை ஏரிக்கு 170 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. மொத்த கொள்ளளவான 500 மில்லியன்கன அடியில் 412 மி.கன அடி தண்ணீா் உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு 750 கன அடி தண்ணீா் வருகிறது. மொத்த உயரமான 24 அடியில் 21 அடிக்கு தண்ணீா் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மி.கன அடியில் 2875 மி.கன அடி தண்ணீா் நிரம்பியுள்ளது 500 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
பூண்டி ஏரிக்கு 2010 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. மொத்த உயரமான 35 அடியில் 33.27 அடியும், மொத்த கொள்ளளவான 3231 மி.கன அடியில் 2600 மி.கன அடியும் தண்ணீா் உள்ளது. 1000 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
புதன், வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் சென்னை, புகா் பகுதிகளில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரிகளில் தண்ணீா் இருப்பு குறித்து அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகிறாா்கள். பலத்த மழை பெய்தால் ஏரிகளில் இருந்து தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.