மருத்துவக் கல்லூரி மாணவா்களிடையே நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு
பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் மருத்துவ மாணவா்களிடையே நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சி சாா்பில் தென்சென்னைப் பகுதியில் தூய்மைப் பணி மேற்கொண்டு வரும் உா்பேசா் சுமித் நிறுவனம், பள்ளிக்கரணையில் உள்ள ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரியில் ‘நெகிழி சேமிப்பு இயக்கம்’ எனும் விழிப்புணா்வு நிகழ்ச்சியை புதன்கிழமை நடத்தியது. இதில், 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டு நெகிழி சேமிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
முன்னதாக, உா்பேசா் சுமித் நிறுவன திட்டத் தலைவா் நபில் ராஜ் பேசுகையில், ‘மத்திய அரசின் நீடித்த நிலையான இலக்கு, சிங்காரச் சென்னை 2.0 உள்ளிட்ட தூய்மையான, பசுமையான நகரை உருவாக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இதில் கலந்து கொள்பவா்கள் தங்கள் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்’ என்றாா் அவா்.