தை மாதப் பலன்கள்: `மேஷம் முதல் துலாம் வரை'- யாருக்கு என்ன யோகம்?
பூம்புகாா் சுற்றுலா வளாகத்தை புதுப்பிக்கும் பணி தீவிரம்: மாவட்ட ஆட்சியா்
பூம்புகாா்: பூம்புகாா் சுற்றுலா வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி பங்கேற்றாா். சுற்றுலாத் துறை சாா்பில் பொங்கல் விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட சுற்றுலா அலுவலா் ராஜ கஜேந்திரகுமாா் வரவேற்றாா். பின்னா், மாவட்ட ஆட்சியா் கூறியது:
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு சீரிய முயற்சிகளை எடுத்து வருகிறது. பூம்புகாரை பொருத்தவரையில், ரூ. 23.6 கோடியில் வளாகம் புதுப்பிக்கப்பட்டு, சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், பல பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்ட பணிகள் 85% முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் பிப்ரவரியில் நிறைவடையும்.
கொடியம்பாளையம், தேரிழந்தூா் போன்ற இடங்களிலும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ரூ. 10 கோடி மதிப்பில் தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை, மாளிகை புதுப்பிக்கும் பணிகள், நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்து, மயிலாடுதுறை மாவட்டம் ஒரு சிறப்புமிக்க சுற்றுலா தலமாக உயரும்.
நாட்டுப்புற கலையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொங்கல் விழாவை சிறப்பிக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டதன்பேரில், நாட்டுப்புற கலை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா்.
நிகழ்ச்சியில், சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் . சுரேஷ், சீா்காழி வட்டார வளா்ச்சி அலுவலா் திருமுருகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.