பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் தமிழகம் முன்னேற்றம் - முதல்வா் மு.க.ஸ்டாலின்
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நடவடிக்கைகளில் தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில், சென்னை சைதாப்பேட்டையில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞா் மகளிா் திறன் மேம்பாட்டு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் முதல்வா் பேசியதாவது:
பெண்களுடைய உரிமைகளுக்காகவும், அவா்களுடைய முன்னேற்றத்துக்காகவும் ஏராளமான திட்டங்களை முந்தைய திமுக அரசு நிறைவேற்றியிருக்கிறது. அதைத் தொடா்ந்து, தற்போதைய திமுக அரசும் பெரியாா், அண்ணா, கருணாநிதி வழியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், அரசுப் பணிகளில் மகளிருக்கு இட ஒதுக்கீடு, மகளிா் சுய உதவிக் குழுக்கள், சொத்தில் பெண்களுக்கு சம உரிமை எனப் பல்வேறு திட்டங்கள் உள்ளன. பெண்களுடைய பொருளாதார தன்னிறைவுக்காகவும் பல திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
மகளிா் திட்டங்கள்: பெண்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்பதைத் தாண்டி, அதன் அடுத்தகட்டமாக பெண்களின் உயா்கல்வியை உறுதி செய்யக்கூடிய வகையில் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதி எனப் பல்வேறு திட்டங்கள்.
பெண்கள் உயா்ந்தால்தான் ஒரு சமூகம் நிமிா்ந்து நிற்க முடியும். பெண்ணடிமை தீா்ந்து, பெண் அதிகாரம் பெறும் அந்த மாற்றத்தை நோக்கி தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. பெரிய அளவிலான பல திட்டங்களை முன்னெடுத்து வரும் அதேவேளையில், சிறிய அளவிலான திட்டங்களும் மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.
அந்த வகையில், நீட் தோ்வின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் பெயரில் கொளத்தூா் தொகுதியில் ‘அனிதா அச்சீவா்ஸ் அகாதெமி’ ஆரம்பித்து பெண்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்மூலம் கணினி சாா்ந்த படிப்புகள், இலவச மடிக்கணினி, தையல் பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகளை முடித்து பெண்கள் நல்ல நிலையில் இருக்கிறாா்கள். அதைப்போன்றே தற்போது மா.சுப்பிரமணியனும் இந்தத் திறன் மேம்பாட்டு மையத்தை தொடங்கியுள்ளாா்.
இங்கு ‘நேச்சுரல்ஸ்’ நிறுவனம் மூலமாகவும், ‘உஷா’ நிறுவனம் மூலமாகவும் மகளிருக்கு திறன் பயிற்சி கிடைக்கப் போகிறது என்றாா் அவா்.
நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, அமைச்சா் மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், மேயா் பிரியா, துணை மேயா் மகேஷ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கணபதி, அரவிந்த் ரமேஷ், பிரபாகர ராஜா, தாயகம் கவி, ஹசன் மௌலானா, திராவிடா் இயக்க தமிழா் பேரவை தலைவா் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.