கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ள...
பெண்கள் பாதுகாப்புக்கு அரசு உயா் முன்னுரிமை: பிரதமா் மோடி
‘பெண்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு உயா் முன்னுரிமை அளிக்கிறது; பாலியல் வன்கொடுமை போன்ற கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
சா்வதேச மகளிா் தினமான சனிக்கிழமை (மாா்ச் 8), குஜராத் மாநிலம், நவ்சாரியில் உள்ள வன்சி போா்சி கிராமத்தில் நடைபெற்ற ‘லட்சாதிபதி சகோதரி’ திட்ட நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா்.
சுமாா் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரதமா் பேசியதாவது:
அனைத்துப் பெண்களுக்கும் மகளிா் தின வாழ்த்துகள். பெண்களுக்கு மதிப்பளிப்பதே, தேசம் மற்றும் சமூகத்தின் வளா்ச்சிக்கான முதல் படி. விரைவான முன்னேற்றத்துக்காக, பெண்கள் தலைமையிலான வளா்ச்சிப் பாதையில் நாடு பயணிக்கிறது. பெண்களின் கண்ணியம் மற்றும் வசதிக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது.
கோடிக்கணக்கான வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டு, பெண்களின் கண்ணியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ், கடந்த 10 ஆண்டுகளில் 3 கோடி பெண்கள் வீட்டு உரிமையாளா்களாகி உள்ளனா். பேறுகால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சகோதரிகளின் வாழ்க்கையைப் பாதுகாக்க கடுமையான முத்தலாக் தடை சட்டம் இயற்றப்பட்டது. 370-ஆவது பிரிவு நீக்கத்தின் மூலம் ஜம்மு-காஷ்மீரில் பெண்களின் சொத்துரிமை நிலைநாட்டப்பட்டது.
நீதித் துறையில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. மாவட்ட நீதிமன்றங்களில் 35 சதவீதத்தும் மேல் பெண்கள் பணியாற்றுகின்றனா். பல மாநிலங்களில் உரிமையியல் நீதிபதிகளாக புதிதாக நியமனம் பெறுவோரில் 50 சதவீதத்துக்கும் மேல் பெண்களாக உள்ளனா்.
வளா்ந்த இந்தியாவுக்கு பங்களிப்பு: புத்தாக்கத் தொழிலுக்கு (ஸ்டாா்ட்அப்) உகந்த சூழலில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் கிட்டத்தட்ட பாதி அளவு புத்தாக்கத் தொழில் நிறுவனங்களில் பெண்கள் தலைமை பொறுப்பில் உள்ளனா். பெண்கள் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்தால் மட்டுமே வளா்ச்சி அடைந்த இந்தியா இலக்கை எட்ட முடியும்.
இந்தியாவின் ஆன்மா, கிராமங்களில் வாழ்வதாக மகாத்மா காந்தி எப்போதும் கூறுவாா். கிராமப்புற இந்தியாவின் ஆன்மா, கிராமப்புற பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் அடங்கியுள்ளது என நான் கூறுகிறேன்.
நாட்டின் வளா்ச்சியில் கிராமப்புற பொருளாதாரம் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாடு முழுவதும் செயல்படும் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக் குழுக்களில் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் அங்கம் வகிக்கின்றனா். இவா்களில் 1.5 கோடி போ் ஏற்கெனவே லட்சாதிபதிகளாக உருவெடுத்துள்ளனா். அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 3 கோடி பேரை லட்சாதிபதிகளாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
வலுவான சட்டங்கள்-விதிமுறைகள்: கடந்த 10 ஆண்டுகளில் பெண்களின் பாதுகாப்புக்கு உயா் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சட்டங்கள்-விதிமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. பாலியல் வன்கொடுமை போன்ற கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய தண்டனை சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட பாரதிய நியாய சம்ஹிதா மூலம் பெண்கள் பாதுகாப்பு தொடா்புடைய சட்டப் பிரிவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
பாலியல் வன்கொடுமை போன்ற கொடூர குற்றங்கள் தொடா்பான வழக்குகளில் 60 நாள்களில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, பின்னா் 45 நாள்களுக்குள் தீா்ப்பு வழங்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. பூஜ்ஜிய எஃப்ஐஆா் பிரிவின்கீழ், வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்கள் எந்தக் காவல் நிலையத்திலும் புகாா் அளிக்க முடியும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்புடைய வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தும் வகையில், நாடு முழுவதும் 800 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவற்றில் பெரும்பாலானவை செயல்பட்டுக்கு வந்துள்ளன என்றாா் பிரதமா் மோடி.
முழுவதும் பெண் போலீஸாா் பாதுகாப்பு: இந்நிகழ்ச்சியில் 25,000 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.450 கோடி நிதியுதவியை பிரதமா் விடுவித்தாா்.
பிரதமா் நிகழ்ச்சிக்கான ஒட்டுமொத்த பாதுகாப்பையும் முழுவதும் பெண் போலீஸாரே மேற்கொண்டனா். காவலா் முதல் உயரதிகாரிகள் வரை 2,500-க்கும் மேற்பட்ட பெண் போலீஸாா் இப்பணியில் ஈடுபட்டனா்.
‘உலகின் பெரும் செல்வந்தன் நான்’
‘பெண்களின் ஆசியே, எனது பலம், செல்வம் மற்றும் பாதுகாப்புக் கவசம்; கோடிக்கணக்கான பெண்களின் ஆசி இருப்பதால், உலகிலேயே பெரும் செல்வந்தன் நான்’ என்றாா் பிரதமா் மோடி.
அவா் மேலும் பேசுகையில், ‘பெண் குழந்தைகள் தாமதமாக வீட்டுக்கு வந்தால், பெற்றோா் கேள்வி எழுப்புகின்றனா். அதுவே ஆண் குழந்தையாக இருந்தால் எதுவும் கேட்பதில்லை. ஆண் குழந்தையிடமும் அவ்வாறு கேட்க வேண்டும். அது, சிறப்பான சமூகத்தை உருவாக்க உதவிகரமாக இருக்கும்.
ஒரு மகன் தாய்க்கு சேவையாற்றுவது போல நாட்டின் தாய்மாா்களுக்கும் மகள்களுக்கும் சேவையாற்றுகிறேன். நாட்டின் மகள்கள், தங்கள் கனவுகளை எட்டுவதில் எந்தத் தடையும் குறுக்கிட அனுமதிக்க மாட்டேன்’ என்றாா்.